தீவிரவாத தாக்குதல் - பாகிஸ்தானுக்கு இந்தியா பதிலடி
இந்திய விமானப்படை விமானங்கள் இன்று அதிகாலை பாகிஸ்தான் எல்லைக்குள் புகுந்து அதிரடியாக தாக்குதல் நடத்தி தீவிரவாத முகாம்களை அழித்தது.
கடந்த 14ஆம் தேதி காஷ்மீரில் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தியதில் 40 இந்திய ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டனர். இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் இந்திய ராணுவம் பாகிஸ்தான் எல்லைக்குள் இன்று புகுந்து அதிரடி தாக்குதலை நடத்தியது. அதிகாலை 3.30 மணியளவில் எல்லைக்கட்டுப்பாட்டு பகுதியைத் தாண்டிச் சென்ற 12 மிராஷ் ஜெட் விமானங்கள், தீவிரவாத முகாம்கள் மீது ஆயிரம் கிலோ எடையுள்ள குண்டுகளை வீசி அழித்துள்ளது. இதுதொடர்பாக 21 நிமிடங்கள் நடத்தப்பட்ட இந்தத் தாக்குதலில் எல்லைப் பகுதியில் தீவிரவாத முகாம்கள் முற்றிலும் அழிக்கப்பட்டதாக இந்திய விமானப்படை குறிப்பிட்டுள்ளது.
அதிகாலை நடந்த துல்லிய தாக்குதல் விவரம்...
தீவிரவாத முகாம்கள் மீது இந்திய விமானப்படை சரியாக 21 நிமிடம் தாக்குதல் நடத்தி, திரும்பியது. அதிகாலை 3.30 மணிக்கு சீறிப்பறந்த இந்தியாவின் 12 மிராஷ் ஜெட் விமானங்கள், பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள பாலோகாட் பகுதியில் அதிகாலை 3.45 மணி முதல் 3.53 மணிவரை தாக்குதலை நடத்தியது. இந்தத் தாக்குதல் சுமார் 8 நிமிடம் நீடித்தது. இதேபோல் முஷாபராபாத் பகுதியில் அதிகாலை 3.48 மணி முதல் 3.55 மணி வரை சுமார் 7 நிமிடம் தாக்குதல் நடத்தியது.
சகோட்டி பகுதியில் அதிகாலை 3.58 மணி முதல் 4.04 மணி வரை சுமார் 6 நிமிடம் நடந்த தாக்குதலில் அங்கிருந்த 12 தீவிரவாத முகாம்கள் முற்றிலும் அழிக்கப்பட்டன. சுமார் 21 நிமிடம் நடந்த தாக்குதலில் ஜெய்ஷ்-இ-முகமது, ஹிஸ்புல் முகாதீன் தீவிரவாத முகாம்கள் முற்றிலும் அழிக்கப்பட்டது. இதில் முக்கியமாக ஜெய்ஷ்-இ-முகமது தீவிரவாத அமைப்பின் கட்டுப்பாட்டு அறை தகர்க்கப்பட்டது.
பாதுகாப்பு தொடர்பாக பாகிஸ்தான் ஆலோசனை
பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீருக்குள் புகுந்து இந்திய ராணுவம் தீவிரவாத முகாம்கள் மீது தாக்குதல் நடத்தியது. இதையடுத்து, பாகிஸ்தான் பாதுகாப்பு தொடர்பாக ஆலோசனை நடத்த அந்நாட்டு வெளியுறவுத் துறை அமைச்சர் ஷா மக்மூத் குரோஷி, அவசர கூட்டத்துக்கு அழைப்பு விடுத்துள்ளார். இதில், இந்திய ராணுவத்தின் தாக்குதல் குறித்தும், உள்நாட்டு பாதுகாப்பை பலப்படுத்துவது தொடர்பாகவும் ஆலோசிக்கப்படும் என்று கூறப்படுகிறது.
"எந்நேரமும் தயாராக இருங்கள்" - இந்திய விமான படைக்கு உத்தரவு
இந்தியா, பாகிஸ்தானுக்கு இடையிலான சர்வதேச எல்லை மற்றும் எல்லைக் கட்டுப்பாட்டு கோடு பகுதியில் இந்திய ராணுவம் உஷார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது. 24 மணிநேரமும் தீவிர கண்காணிப்பில் இருக்குமாறு விமானப் படைக்கு அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர். பாகிஸ்தான் விமானப்படை இந்திய எல்லைக்குள் புகுந்து தாக்குதல் நடத்தினால் பதிலடிக்கு தயாராக இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
Next Story