சபரிமலை அய்யப்பனை தரிசித்த 2 பெண்கள் : மாநிலம் முழுவதும் கடும் எதிர்ப்பு

சபரிமலை அய்யப்பன் கோயிலில் 2 பெண்கள் சாமி தரிசனம் செய்த சம்பவத்தை கண்டித்து மாநிலம் முழுவதும் பெரும் போராட்டம் வெடித்துள்ளது.
சபரிமலை அய்யப்பனை தரிசித்த 2 பெண்கள் : மாநிலம் முழுவதும் கடும் எதிர்ப்பு
x
கோழிக்கோட்டை சேர்ந்த பிந்து, மலப்புரத்தை சேர்ந்த கனகதுர்கா ஆகிய 2 பெண்கள் நேற்று அதிகாலை சபரிமலை அய்யப்பனை தரிசித்தனர். போலீசார் உதவியுடன் நடந்த சம்பவத்தால் சபரிமலையில் பெரும் பரபரப்பான சூழல் உருவானது. சபரிமலை கோயிலுக்குள் பெண்கள் நுழைந்து தரிசனம் செய்ததால் கோயிலின் நடை உடனடியாக அடைக்கப்பட்டது. இதையடுத்து தந்திரி மற்றும் மேல்சாந்தி இருவரும் ஆலோசனை செய்து கோவிலை சுத்தம் செய்யும் விதமாக சுத்திகலச பூஜை நடந்தது. இதற்காக கோயிலின் நடை அடைக்கப்பட்டதோடு சுத்திகலச பூஜை நடந்த பிறகே நடை மீண்டும் திறக்கப்பட்டது. 

சபரிமலைக்கு பெண்கள் சென்றதற்கு எதிர்ப்பு : கேரளாவின் பல்வேறு பகுதிகளில் போராட்டம் 

சபரிமலை சன்னிதானத்திற்குள் பெண்கள் அனுமதிக்கப்பட்டதற்கு கேரளாவில் கடும் எதிர்ப்பு உருவாகியுள்ளது.பாஜக மற்றும் சபரிமலை கர்ம சமிதி சங்கம் சார்பில் பல்வேறு பகுதிகளில் போராட்டம் வெடித்தது. எரிமேலி, கோதமங்கலம், நிலக்கல், காசர்கோடு உள்ளிட்ட பல பகுதிகளில் போராட்டம் மற்றும் முற்றுகை போராட்டங்கள் நடந்தது. 

கேரள அரசை கண்டித்து திருவனந்தபுரம் தலைமை செயலகம் முன்பு பாஜக இளைஞரணியினர், ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அரசுக்கு எதிராக முழக்கங்கள் எழுப்பிக் கொண்டிருந்த போது திடீரென அங்கு வந்த மார்க்சிஸ்ட் கட்சியின் இளைஞரணியினர், தாக்குதல் நடத்தினர், இரு தரப்பினருக்கும் கடும் மோதல் நிகழ்ந்ததையடுத்து, போலீசார் தண்ணீரை பீய்ச்சியடித்து கலைத்தனர். கன்னூர்  பேருந்து நிலையத்தில், கற்கள் வீசப்பட்டதால், பயணிகள் இறக்கி விடப்பட்டனர். மேலும், மட்டனூர், மற்றும் இருட்டியில் கம்பூனிஸ்ட் கட்சியின் கொடிக்கம்பங்களை ஆர்ப்பாட்டக்காரர்கள் அகற்றினர். இதனிடையே, இருட்டியில் அரசு விழாவிற்கு வந்த கேரள சுகாதரத்துறை அமைச்சர் ஷைலஜாவிற்கு கருப்பு கொடி காட்டிய இருவர் கைது செய்யப்பட்டனர்.

இதேபோல் பந்தளத்தில், சபரிமலை கர்மா சமிதியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது ஒரு சிலர் போலீசாரிடம் வாக்குவாதம் நடத்தி, கற்களை வீசியும் தாக்கியதால் பரபரப்பு ஏற்பட்டது. இதேபோல் கொச்சி மற்றும் ஆழப்புழாவில் நடைபெற்ற போராட்டங்களும் மோதலில் முடிந்தது.

Next Story

மேலும் செய்திகள்