ரயில் மற்றும் சாலை என இரண்டுமே இருக்கும் இந்தியாவின் மிக நீளமான பாலத்தின் சிறப்பம்சம்
ரயில் மற்றும் சாலை என இரண்டுமே இருக்கும் இந்தியாவின் மிக நீளமான பாலத்தை பிரதமர் மோடி இன்று திறந்து வைக்க உள்ளார்.
அசாம் மாநிலத்தில் பிரமபுத்திரா நதியின் மீது 4.94 கிலோ மீட்டர் தூரத்திற்கு கட்டப்பட்டுள்ள இந்த பாலத்திற்கு போகிபீல் என பெயரிடப்பட்டுள்ளது. அசாமின் தீமஜி (Dhemaji) மற்றும் டிபுருகா(Dibrugarh) மாவட்டங்களை போகிபீல் பாலம் இணைக்கிறது.1997-98 காலக்கட்டத்தில் தேவகவுடா பிரதமராக இருந்த போது இந்த பாலத்திற்கு அடிக்கல் நாட்டப்பட்டது. 2002ஆம் ஆண்டு பாலத்தின் கட்டுமான பணிகள் தொடங்கப்பட்டன. போகிபீல் பால பணிகளுக்கான மொத்த செலவு 5 ஆயிரத்து 960 கோடி ரூபாய். சுமார் 30 லட்சம் சிமெண்ட் மூட்டைகள், சுமார்19 ஆயிரத்து 250 டன் வலுவூட்டப்பட்ட உருக்கு கம்பிகள், 2 ஆயிரத்து 800 டன் கட்டுமான இரும்பு கம்பிகள் மூலம் இந்த பாலம் உருவாக்கப்பட்டுள்ளது. இரண்டு அடுக்கு பாலமாக கட்டப்பட்டுள்ள இதன் மேல் தளத்தில் சாலையும், கீழ் பகுதியில் ரயில் தண்டவாளமும் போடப்பட்டுள்ளது. இரண்டு வழித்தடங்கள் உள்ள வகையில் ரயில் பாதையும், 3 வழிகள் உள்ள வகையில் சாலையும் உருவாக்கப்பட்டுள்ளது.
இதன் மூலம் 705 கிலோ மீட்டர் பயண தூரம் மிச்சமாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கிழக்கு பிராந்தியத்தில் தேச பாதுகாப்பை வலுப்படுத்த ராணுவ படைகளின் போக்குவரத்திற்கு இந்த பாலம் கைகொடுக்கும் என கூறப்படுகிறது.16 ஆண்டுகள் கிடப்பில் போடப்பட்டுள்ள திட்டத்தை 4 ஆண்டுகளில் முடித்துள்ளதாக பாஜக அரசு பெருமை தெரிவித்துள்ளது. ரயில் மற்றும் சாலை என இரண்டுமே இருக்கும் இந்தியாவின் மிக நீளமான பாலம் என்ற பெருமையை இது பெற்றுள்ளது. கேரளாவின் கொச்சி நகரில் உள்ள வெம்பநாத் (Vembanad) பாலமே இதுவரை நாட்டின் மிக நீளமான ரயில் பாலமாக இருந்து வந்தது.
அசாம், அருணாச்சல பிரதேசத்தை இணைக்கும் Dhola-Sadiya பாலம், கங்கை நதியின் மீது பாட்னா மற்றும் பீகாரை இணைக்கும் மகாத்மா காந்தி சேது பாலம் மற்றும் மும்பையில் உள்ள பாந்த்ரா, வொர்லி கடல் இணைப்பு பாலத்திற்கு அடுத்து இந்தியாவின் 4வது மிக நீளமான பாலம் என்ற பெயர் போகிபீல் பாலத்திற்கு கிடைத்துள்ளது. மறைந்த முன்னாள் பிரதமர் வாஜ்பாய் பிறந்தநாள் மற்றும் கிறிஸ்துமஸை ஒட்டி நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடி வழங்கும் பரிசு என்றும் போகிபீல்பால திறப்பு வர்ணிக்கப்படுகிறது.
Next Story