நடிகர் அம்பரீஷ் மறைவு - தலைவர்கள், திரையுலகத்தினர் அஞ்சலி

கன்னட நடிகரும் முன்னாள் மத்திய அமைச்சருமான அம்பரிஷ் மறைவுக்கு திமுக தலைவர் ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.
நடிகர் அம்பரீஷ் மறைவு - தலைவர்கள், திரையுலகத்தினர் அஞ்சலி
x
கன்னட நடிகரும் முன்னாள் மத்திய அமைச்சருமான அம்பரிஷ் மறைவுக்கு திமுக தலைவர் ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக, சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், அம்பரீஷ் மறைவு செய்து கேட்டு வேதனை அடைந்துள்ளதாக குறிப்பிட்டுள்ளார். இதுபோல, அம்பரீஷ் மறைவுக்கு தேமுதிக நிறுவன தலைவரும் பொதுச் செயலாளருமான விஜயகாந்த் இரங்கல் தெரிவித்துள்ளார். அம்பரீஷின் மறைவுக்கு கேரள முதலமைச்ர் பினராய் விஜயன்,  நடிகை குஷ்பு, நடிகர் விவேக் உள்ளிட்டோரும் இரங்கல் தெரிவித்துள்ளனர். 

சரத்குமார் இரங்கல் :


நடிகர் அம்பரீஷின் மரணம், அதிர்ச்சி அளிப்பதாக சமத்துவ மக்கள் கட்சி தலைவரும் நடிகருமான சரத்குமார் தெரிவித்துள்ளார். கடந்த ஒரு மாதத்திற்கு முன்னர் கூட அவருடன் சேர்ந்து படம் பார்த்ததாகவும், அம்பரீஷ் இறப்பு செய்தியை ஜீரணிக்கமுடியவில்லை என்றும் குறிப்பிட்டுள்ளார்.

கமல்ஹாசன் இரங்கல் :



மக்கள் நீதி மய்ய கட்சி தலைவர் கமல்ஹாசன் விடுத்துள்ள இரங்கல் செய்தியில், முரட்டு உருவம், மழலை உள்ளம் கொண்ட அம்பரீஷ், 42 ஆண்டுகால நண்பர் என தெரிவித்துள்ளார். அவரை இழந்து வாடும் குடும்பத்தினர் மற்றும் ரசிகர்களுக்கு அனுதாபங்களை தெரிவித்து கொள்வதாக கமல் கூறியுள்ளார்.

தென்னிந்திய நடிகர் சங்கம் இரங்கல் :

புகழ் பெற்ற கன்னட நடிகரும், முன்னாள் மத்திய-மாநில அமைச்சருமான அம்பரீஷின் மறைவுக்கு தென்னிந்திய நடிகர் சங்கம் இரங்கல் தெரிவித்துள்ளது. அரசியலிலும் சினிமாவிலும் வரலாறு படைத்த அவரது மறைவு, இந்திய நாட்டிற்கும் திரை உலகிற்கும் ஈடு செய்ய இயலாத இழப்பாகும் என்று தென்னிந்திய நடிகர் சங்கம் இரங்கல் செய்திக்குறிப்பு வெளியிட்டுள்ளது. 

நடிகர்அம்பரீஷ் ஆதரவாளர்கள் சாலை மறியல் :

நடிகர் அம்பரீஷ் ஆதரவாளர்கள் பல்வேறு இடங்களில் சாலை மறியலில் ஈடுபட்டதால், மாண்டியாவில் 144 தடையுத்தரவு போடப்பட்டுள்ளது. அம்பரீஷின் உடலை மாண்டியாவிற்கு எடுத்து வரக்கோரி அவரது ரசிகர்கள் பல்வேறு இடங்களில் சாலை மறியலில் ஈடுபட்டனர். பதற்றம் காரணமாக பெங்களுருவில் உள்ள மதுக்கடைகளுக்கு இன்றும் நாளையும் விடுமுறை விடப்பட்டுள்ளது. 

மாண்டியா கொண்டு செல்லப்படுகிறது அம்பரிஷ் உடல் :


இதனிடையே மக்கள் போராட்டத்தை அடுத்து அம்பரிஷின் உடல் ராணுவ ஹெலிகாப்டர் மூலம் மாண்டியாவிற்கு கொண்டு செல்லப்படுகிறது. நாளை காலை வரை விஸ்வேஸ்வரய்யா மைதானத்தில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு, பின்னர் மீண்டும் பெங்களூரு கண்டிவாரா மைதானத்துக்கு கொண்டு வரப்படுகிறது. நாளை காலை 11 மணி அளவில் உடல் தகனம் செய்யப்படும் என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. 




Next Story

மேலும் செய்திகள்