அந்தமான் தீவில் அமெரிக்க இளைஞர் கொலை : உள்துறை அமைச்சகம் அறிக்கை அளிக்க பழங்குடியினத்தவர் தேசிய ஆணையம் கோரிக்கை

அந்தமான் தீவில் அமெரிக்க இளைஞர் கொலை செய்யப்பட்டது தொடர்பாக அறிக்கை அளிக்குமாறு மத்திய அரசுக்கு பழங்குடியினத்தவருக்கான தேசிய ஆணையம் கோரிக்கை விடுத்துள்ளது.
அந்தமான் தீவில் அமெரிக்க இளைஞர் கொலை : உள்துறை அமைச்சகம் அறிக்கை அளிக்க பழங்குடியினத்தவர் தேசிய ஆணையம் கோரிக்கை
x
அந்தமானில் உள்ள பல்வேறு தீவுகளில் பழங்குடி மக்கள் வசித்து வருகின்றனர். வெளியுலக தொடர்பு இல்லாமல்  பழங்குடியின மக்கள் தனிமையாக வசிக்கும் 29  தீவுகளுக்கு சுற்றுலாப்பயணிகள் உள்ளிட்ட யாரும் செல்லக்கூடாது என அரசு தடை விதித்துள்ளது. இந்நிலையில் சாகசங்களில் ஆர்வம் கொண்ட  அமெரிக்காவை சேர்ந்த ஜான் அலன் சாவ் என்ற இளைஞர் அந்தமான் சென்றுள்ளார். பலமுறை இந்தியா வந்துள்ள அலன், அந்தமானில் உள்ள வடக்கு சென்டினல் தீவுக்கு தடையை மீறி ரகசியமாக செல்ல விரும்பினார். உள்ளூர் மீனவர்களுக்கு அதிக பணம் கொடுத்து அவர்கள் உதவியுடன் படகில் கடந்த 14 ந்தேதி வடக்கு சென்டினல் தீவுக்கு சென்ற அலனை தீவில் இறக்கி விட்ட போது அங்குள்ள பழங்குடியின மக்கள் அம்புகளை எய்து தாக்கியதாக கூறப்படுகிறது. இதனால் அச்சமடைந்த மீனவர்கள் அலனை அங்கேயே விட்டு விட்டு தப்பி வந்துள்ளனர். 3 நாட்கள் கழித்து மீனவர்கள் மீண்டும் சென்று பார்த்த போது பழங்குடியின மக்கள் அலனை கொன்று மணலில் புதைத்திருந்தது தெரியவந்தது. இதையடுத்து அந்தமான் திரும்பிய அந்த மீனவர்கள் அலனின் நண்பரான உள்ளூர் மதபோதகரிடம் கூறியுள்ளனர். அவர் அமெரிக்காவில் உள்ள அலனின் குடும்பத்திற்கு தகவல் அளித்துள்ளார். அலனின் குடும்பத்தார் அளித்த புகாரின் பேரில் சென்னையில் உள்ள அமெரிக்க துணை தூதரகம், அந்தமான் - நிகோபர் நிர்வாகத்திற்கு தகவல் அளித்துள்ளது. அதன் பேரில் உள்ளூர் போலீசார் விசாரணை நடத்தி அலனுக்கு உதவிய 7 மீனவர்களை கைது செய்துள்ளனர். வடக்கு சென்டினல் தீவில் உள்ள அலனின் உடலை ஹெலிகாப்டர் மூலம் மீட்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இச்சம்பவம் குறித்து வருத்தம் தெரிவித்துள்ள பழங்குடியினத்தவருக்கான தேசிய ஆணையம், அலன் கொலை சம்பவம் குறித்த விசாரணை அறிக்கையையும், வெளிநாட்டினர் உள்ளிட்ட பிறர் செல்ல தடை விதிக்கப்பட்ட தீவுகள் குறித்த விவரங்களையும் உடனடியாக அளிக்குமாறு, மத்திய உள்துறை அமைச்சகம் மற்றும் அந்தமான்- நிகோபார் தீவு நிர்வாகத்துக்கு கோரிக்கை விடுத்துள்ளது.    


Next Story

மேலும் செய்திகள்