சபரிமலை தீர்ப்பை மறுஆய்வு செய்யக்கோரி 43 மனு தாக்கல்
சபரிமலையில் அனைத்து வயது பெண்களையும் அனுமதிக்கும் உச்சநீதிமன்ற தீர்ப்பை மறு ஆய்வு செய்யக்கோரி தாக்கல் செய்யப்பட்டு உள்ள மனுக்கள் மீது தலைமை நீதிபதி அமர்வு இன்று பிற்பகல் முடிவு செய்கிறது.
சபரிமலையில் இளம் பெண்களை அனுமதிக்கும் தீர்ப்பை மறு ஆய்வு செய்ய கோரி உச்சநீதிமன்றத்தில் 43 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டு உள்ளன. சமர்பிக்கப்பட்ட இந்த மனுக்களை உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்ஜன் கோகோய் தலைமையிலான அமர்வு இன்று பிற்பகல் 3 மணிக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்கிறது.
சேம்பரில் நடைபெறும் இந்த விசாரணையில் வாத, பிரதிவாதங்களுக்கு அனுமதி இல்லை. இந்த அமர்வில் நீதிபதிகள் ஒய்.வி.சந்திரசூட், ரோகிங்டன் நாரிமன், இந்து மல்கோத்ரா, கான்வில்கர் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.
இந்த மனுக்கள் தவிர, உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள 4 ரிட் மனுக்கள் மீதான விசாரணை தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய் தலைமையிலான 3 நீதிபதிகள் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வருகிறது. திருவிதாங்கூர் தேவசம் போர்டு சார்பில் மூத்த வழக்கறிஞர் சந்தர் உதய்சிங் ஆஜராகி வாதிடுகிறார். ஏற்கனவே இந்த வழக்கில் ஆஜரான ஆரியமான் சுந்தரம் வழக்கில் ஆஜராக மறுத்துள்ள நிலையில், சந்தர் உதய்சிங் ஆஜராகிறார் என தேவசம் போர்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
Next Story