வேட்பாளர்கள் மீதான வழக்கு விவரங்கள் : படிவம்-26 உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு ஏற்ப திருத்தம்
நாடாளுமன்ற, சட்டப்பேரவை மற்றும் மேலவை தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் இனி தங்கள் மீதான வழக்கு விவரங்களை வேட்பு மனுவுடன் விரிவாக தெரிவிக்கும் வகையில், தேர்தல் ஆணையம் படிவம்-26-ல் திருத்தம் செய்துள்ளது.
தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் தங்கள் மீதான வழக்கு விவரங்களை, வேட்பு மனுவுடன் இணைக்க தேவையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என இந்திய தேர்தல் ஆணையத்துக்கு உச்சநீதிமன்றம் அண்மையில் உத்தரவிட்டது.இதன் அடிப்படையில் தற்போது படிவம் எண் 26-ல் இந்திய தேர்தல் ஆணையம் திருத்தம் செய்துள்ளது. இனி தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் தங்கள் மீதான வழக்கு விவரங்களை விரிவான வகையில், திருத்தப்பட்ட படிவம்-26-ல் வேட்பு மனுவுடன் தாக்கல் செய்ய வேண்டும்.இதுதவிர, ஒரு கட்சியின் சார்பில் போட்டியிடும் வேட்பாளர் தன் மீதான வழக்கு விவரங்களை கட்சிக்கு தெரியப்படுத்த வேண்டும்.இதுதவிர, இந்த விவரங்களை அந்த அரசியல் கட்சி, தனது இணையதளத்தில் பதிவேற்றுவது கட்டாயமாகிறது. வேட்பு மனு தாக்கல் செய்யப்பட்டதில் இருந்து இந்த தகவல்களை குறைந்தபட்சம் 3 முறையாவது அதிகம் விற்பனையாகும் செய்தித்தாள் மற்றும் அதிகம் பேர் பார்க்கும் ஊடகத்தில் விரிவாக சம்மந்தப்பட்ட வேட்பாளர் மற்றும் அரசியல் கட்சியால் மக்களுக்கு சென்றடையும் வகையில் விளம்பரப்படுத்த வேண்டும்.விளம்பரம் செய்ததற்கான படிவம் சி-1-ஐ வேட்பாளர்கள் தாக்கல் செய்ய வேண்டும். இதுதொடர்பான தகவல்களை தேர்தல் ஆணையத்திடம் தேர்தல் முடிந்த 30 நாட்களுக்குள் சம்மந்தப்பட்ட அரசியல் கட்சி, வேட்பாளர் தாக்கல் செய்ய வேண்டும். மாநில தேர்தல் அதிகாரி 15 நாட்களுக்குள் தேர்தல் ஆணையத்துக்கு விளம்பரம் செய்ய தவறியவர்கள் தொடர்பான அறிக்கையை சமர்ப்பிக்க வேண்டும். இதுதவிர அரசு கட்டடங்களை மற்றும் வசதிகளை பயன்படுத்தியதற்கான கட்டண பாக்கி தொடர்பாகவும் படிவம்-26 உட்பிரிவு 8-ல் வேட்பாளர்கள் தெரிவிக்க வேண்டும். இந்த திருத்தம் தொடர்பாக மாவட்ட தேர்தல் அதிகாரி, தேர்தல் நடத்தும் அலுவலர் மற்றும் அங்கீகரிக்கப்பட்ட, அங்கீகரிக்கப்படாத தேசிய மற்றும் மாநில கட்சிகளுக்கு தெரியப்படுத்த வேண்டும் என இந்திய தேர்தல் ஆணையம், அனைத்து மாநில மற்றும் யூனியன் பிரதேச தலைமை தேர்தல் அதிகாரிகளுக்கு அனுப்பிய சுற்றறிக்கையில் தெரிவித்துள்ளது.
Next Story