கேரள கன்னியாஸ்திரி வழக்கு : பேராயர் பிராங்கோ முல்லக்கல் கைது
பாலியல் குற்றச்சாட்டில் சிக்கிய கேரள பிஷப் பிராங்கோ முல்லக்கல், அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளார்.
கேரள மாநிலம் கொச்சியை சேர்ந்த கன்னியாஸ்திரி ஒருவர், பஞ்சாப் மாநிலம் ஜலந்தரில் பேராயராக பணியாற்றி வந்த பிராங்கோ முல்லக்கல் மீது பாலியல் புகார் தெரிவித்திருந்தார். பேராயரை கைது செய்யுமாறு கொச்சியில் கடந்த இரண்டு வாரங்களாக போராட்டம் நடந்து வந்தது. இந்நிலையில், ஜலந்தரில் இருந்து கொச்சிக்கு பாதிரியார் பிராங்கோவை கேரள போலீசார் அழைத்து வந்தனர். அவரிடம், வைக்கம் துணை காவல் ஆணையர் தலைமையிலான குற்றப்பிரிவு போலீசார் விசாரணை நடத்தினர். இரண்டு நாள் விசாரணைக்கு பிறகு, பேராயரை கேரள போலீசார் கைது செய்தனர். பின்னர், கொச்சியில் உள்ள திருப்புந்துரா அரசு மருத்துவமனைக்கு பேராயரை பரிசோதனைக்காக போலீசார் அழைத்துச் சென்றனர். இதற்கிடையே, பேராயர் பிராங்கோவின் ராஜினாமா கடிதத்தை கத்தோலிக்க தலைமையகமான வாடிகன் ஏற்று கொண்டுள்ளது. முன்னதாக, கோட்டயத்தில் செய்தியாளர்களை சந்தித்த கேரள எம்.எல்.ஏ. ஜார்ஜ், பேராயர் பிராங்கோவை சிக்க வைப்பதற்காக காவல் துறையில் சூழ்ச்சி நடைபெறுவதாக குற்றஞ்சாட்டி உள்ளார்.
"கத்தோலிக்க பேராயர்களுக்கு வருத்தமான நிகழ்வு" - கத்தோலிக்க பேராயர்கள் கூட்டமைப்பு அறிக்கை
பலாத்கார வழக்கில் முன்னாள் பேராயர் பிராங்கோ கைது செய்யப்பட்டுள்ள நிலையில், இந்திய நீதித்துறையின் மீது முழு நம்பிக்கை உள்ளதாக கத்தோலிக்க பேராயர்கள் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. இது தொடர்பாக வெளியிட்டுள்ள அறிக்கையில், பேராயர்கள் அனைவருக்கும் வருத்தமான நிகழ்வு இது எனவும், பிராங்கோ வழக்கில் ஊடகங்களிடம் இருந்து அதிகமாக தாங்கள் கற்றுக் கொண்டதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த விவகாரத்தில் சம்பந்தப்பட்ட அனைவருக்காகவும் பிரார்த்தனை செய்வதாகவும் அந்த அறிக்கையில் பேராயர்கள் தெரிவித்துள்ளனர்.
காலவரையற்ற உண்ணாவிரதத்தை முடித்தார் சமூக ஆர்வலர்
பலாத்கார வழக்கில் முன்னாள் பேராயர் பிராங்கோ கைது செய்யப்பட்டதை தொடர்ந்து, சமூக ஆர்வலர் ஸ்டீபன் மாத்யூஸ், தனது உண்ணாவிரதத்தை முடித்துக் கொண்டார். கொச்சியில் கடந்த இரண்டு வாரங்களாக உண்ணாவிரதம் மேற்கொண்டு வந்த அவரை, அவரது உடல்நிலை மோசமடைந்ததால் சில தினங்களுக்கு முன் மருத்துவமனையில் சேர்த்திருந்தனர். அங்கும், அவர் உண்ணாவிரதத்தை தொடர்ந்த நிலையில், இந்த முடிவை எடுத்துள்ளார்.
Next Story