"கேரள கன்னியாஸ்திரி பலாத்கார வழக்கு விசாரணைக்கு உதவ தயார்" - பஞ்சாப் காவல் ஆணையர்
கேரள கன்னியாஸ்திரி பலாத்கார வழக்கில் கேரள மாநில போலீசாருக்கு உதவ தயாராக உள்ளதாக பஞ்சாப் போலீசார் தெரிவித்துள்ளனர்.
கேரள மாநிலத்தை சேர்ந்த கன்னியாஸ்திரி ஒருவர், பஞ்சாப் மாநிலம் ஜலந்தரில் உள்ள பிஷப் பிரான்கோ முலக்கல் மீது பாலியல் புகார் தெரிவித்துள்ளார். பலமுறை தன்னை பலாத்காரம் செய்ததாக கன்னியாஸ்திரி அளித்த புகாரில், கேரள போலீசார் நடவடிக்கை எடுக்கவில்லை என குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இந்நிலையில், கேரள போலீசார், ஜலந்தருக்கு வந்து விசாரணை நடத்தினால் அவர்களுக்கு ஒத்துழைப்பு தர தயாராக உள்ளதாக ஜலந்தர் காவல் கண்காணிப்பாளர் பிரவீன் குமார் தெரிவித்துள்ளார். பிஷப் பிரான்கோவிடம் ஜலந்தர் போலீசார் விசாரிக்க முடியாது எனவும் குறிப்பிட்டார். இதற்கிடையே, தனக்கு நீதி வழங்கக் கோரி, கிறிஸ்தவ தலைமை இடமான வாடிகனுக்கு, பாதிக்கப்பட்ட கன்னியாஸ்திரி கடிதம் எழுதியுள்ளார்.
பிஷப்புக்கு எதிராக பெண்கள் அமைப்பினர் போராட்டம்:
பாலியல் புகார் தெரிவித்துள்ள கன்னியாஸ்திரிக்கு ஆதரவாகவும், பிஷப் பிரான்கோவுக்கு எதிராகவும் பெண்கள் அமைப்பினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். கேரள மாநிலம் கொச்சியில், தேசிய பெண்கள் முன்னணி சார்பாக நடைபெற்ற இந்த போராட்டத்தில் ஏராளமானோர் பங்கேற்றனர். 4 வது நாளாக நீடிக்கும் இந்த போராட்டத்தில், ஏராளமான கிறிஸ்தவ கன்னியாஸ்திரிகளும் பல்வேறு மாணவர் அமைப்பினரும் கலந்து கொண்டு பிஷப்பை கைது செய்யுமாறு வலியுறுத்தினர்.
பாலியல் குற்றச்சாட்டுக்கு ஆளான பிஷப் விளக்கம்:
இதற்கிடையே பஞ்சாப் மாநிலம் ஜலந்தரில் செய்தியாளர்களை சந்தித்த பிஷப் பிரான்கோ முலக்கல் தன்னிடம் போலீசார் 9 மணி நேரம் விசாரணை நடத்தியதாகவும், இதுபோல, கன்னியாஸ்திரியிடடும் வாக்குமூலம் பெற்றதாகவும் தெரிவித்தார். இரண்டு பேரின் அறிக்கைகளை போலீசார் ஆய்வு செய்து, யார் சொல்வது உண்மை என கண்டுபிடிப்பார்கள் என குறிப்பிட்ட பிஷப் பிரான்கோ, தனக்கு எதிராக கன்னியாஸ்திரிகள் போராட்டம் நடத்துவது அவர்களின் உரிமை எனவும் கூறியுள்ளார்.
Next Story