கேரள வரலாற்றில் முன்எப்போதும் இல்லாத அளவிற்கு இயற்கை பேரழிவு - முதலமைச்சர் பினராயி விஜயன்
கேரள வரலாற்றில் முன்எப்போதும் இல்லாத அளவிற்கு இயற்கை பேரழிவு ஏற்பட்டுள்ளதாக அம்மாநில முதலமைச்சர் பினராயி விஜயன் வேதனை தெரிவித்துள்ளார்.
கேரளாவில் உள்ள 14 மாநிலங்களுக்கும் இந்திய வானிலை ஆய்வு மையம் சிவப்பு எச்சரிக்கை விடுத்துள்ள நிலையில்,உயரதிகாரிகளுடன் முதலமைச்சர் பினராயி விஜயன் இன்று திருவனந்தபுரத்தில் ஆலோசனை நடத்தினார். இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், கேரள வரலாற்றில் முன்எப்போதும் இல்லாத அளவிற்கு இயற்கை பேரழிவு ஏற்பட்டுள்ளதாகவும், அதற்கு தாங்கள் சாட்சிகளாக உள்ளதாகவும் தெரிவித்தார். பெரும்பாலான நீரேற்று நிலையங்கள் மழை வெள்ளத்தில் மூழ்கியுள்ளதாகவும், நீரேற்றும் இயந்திரங்கள் முற்றிலும் சேதம் அடைந்து உள்ளதாகவும், தற்போது மக்களுக்கு குடிநீர் வழங்குவது தான் அரசின் முன்னுரிமையாக உள்ளதாகவும் கூறினார். மாநில அரசு அதிகாரிகள் அனைவரும் மீட்பு மற்றும் நிவாரணப் பணியில் ஈடுபட்டு உள்ளதாகவும், இன்னும் 4 நாட்களுக்கு மழை நீடிக்கும் என்பதால் அனைவரும் கவனமாக இருக்க வேண்டிய நிலை உள்ளதாகவும் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார். இந்த சிக்கலான தருணத்தில் அண்டை மாநிலங்கள் பெரும் உதவியாக உள்ளதாக தெரிவித்த கேரள முதலமைச்சர், எதிர்க்காலத்திலும் அவர்களின் உதவி அவசியம் என்று தெரிவித்தார்.
Next Story