குழந்தைகள் மேம்பாட்டுக்கு தனி அமைச்சகம் ஏன் அமைக்க கூடாது? - மத்திய அரசு பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு
குழந்தைகள் மேம்பாட்டுக்கு என தனி அமைச்சகத்தை ஏன் அமைக்க கூடாது என்பது குறித்து பதிலளிக்கும்படி, மத்திய அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
குழந்தைகளுக்கு எதிராக பாலியல் குற்றங்களில் ஈடுபடுவோருக்கு, இந்திய தண்டனைச் சட்டம், சிறார் நீதி சட்டம் மற்றும் போக்சோ சட்டங்களின் கீழ் தண்டனை வழங்குவதுடன், ஆண்மைப் பறிப்பு தண்டனையும் வழங்க வேண்டும் என, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்திருந்தது. போக்சோ சட்டம் குறித்து மக்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் அனைத்து மாநில அரசுகளுக்கு அறிவுறுத்தவும் உத்தரவிட்டிருந்தது.
இந்த உத்தரவை அமல்படுத்த மத்திய அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை எனக் கூறி, சென்னையைச் சேர்ந்த கிரிஜா ராகவன் என்பவர் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தாக்கல் செய்திருந்தார். அதை விசாரித்த நீதிபதி கிருபாகரன், பெண்கள் மற்றும் குழந்தைகள் நலத்துறையை பிரித்து, குழந்தைகள் மேம்பாட்டுக்கு என தனி துறையை அமைப்பதற்கான நேரம் வந்து விட்டதாகக் கூறினார்.
இது சம்பந்தமாக விளக்கம் அளிக்க மத்திய அரசு தரப்பு வழக்கறிஞருக்கு நீதிபதி உத்தரவிட்டார். நிர்பயா நிதியத்தின் கீழ் மாநில அரசுகளுக்கு நிதி ஒதுக்குவது தொடர்பாக மத்திய அரசு ஏதேனும் விதிகள் வகுக்கப்பட்டுள்ளதா? என்பது குறித்து பதிலளிக்க உத்தரவிட்ட நீதிபதி, விசாரணையை ஆகஸ்ட் 17ஆம் தேதிக்கு தள்ளிவைத்தார்.
Next Story