தாடி வளர்ப்போர் சங்கம் ஆரம்பித்த இளைஞர்கள் - சமூக சேவையாற்றுவதில் ஆர்வம்
தாடி வளர்ப்பதில் சாதனை புரிவது மட்டுமின்றி, சங்கத்தை ஆரம்பித்து, சமூக சேவையிலும் சாதித்து வருகின்றனர் இந்த இளைஞர்கள்.
கேரள மாநிலம், திருவனந்தபுரத்தில்,இளைஞர்கள் ஒன்று சேர்ந்து, ஒரு சங்கத்தை உருவாக்கியுள்ளனர்.அது தான், தாடி வளர்ப்போர் சங்கம்.இந்த சங்கத்தின் ஓராண்டு நிறைவு விழாவை, அவர்கள் உற்சாகத்துடன் கொண்டாடினார்கள். உற்சாகமாகவே தொடங்கப்பட்ட இந்த சங்கத்தில், சுமார் 400க்கும் மேற்பட்ட உறுப்பினர்கள் உள்ளனர். அனைவருமே,21 வயதை ஒட்டியவர்கள்.
தாடி மீது, தீராத காதல் கொண்டுள்ள இந்த இளைஞர்கள், கொஞ்சமல்ல... நிறையவே தாடி வளர்த்துள்ளனர். தாடி வைத்திருப்பவர்கள் என்றாலே, சந்தேக கண்களோடு பார்க்கும் நிலையை மாற்ற வேண்டுமென இந்த ''தாடிவாலாக்கள்'' லட்சியம் கொண்டுள்ளனர்.''தாடி வைத்திருப்பவர்களும் நல்லவர்களே'' எனக் கூறி வரும் இவர்கள், வெறும் வார்த்தைகளால் நின்றுவிடவில்லை. தங்களது அமைப்பை, சமூக சேவையாற்ற பயன்படுத்தி வருகின்றனர்.முதியோர் இல்லம், சிறுவர் காப்பகத்திற்கு உதவி வரும் இவர்கள், முதலாமாண்டு விழாவை, ரத்த தான முகாமாக மாற்றிவிட்டனர்.''தாடி வளர்ப்போர் சங்கமா?'' என, இவர்களை அதிசயமாக பார்த்தவர்களை, ஆச்சரியப்பட வைத்து விட்டனர் இந்த தாடிக்கார இளைஞர்கள்... இவர்கள், பாசக்கார இளைஞர்கள்.
Next Story