மனிதக் கழிவுகளை மனிதர்களே அகற்றும் முறை - உத்தரப்பிரதேசத்தில் அதிகமானோர் ஈடுபட்டு வருவது தெரியவந்துள்ளது
மனிதக் கழிவுகளை மனிதர்களே அகற்றும் முறை குறித்து நடத்தப்பட்ட ஆய்வில் உத்தரப்பிரதேசத்தில் அதிகமானோர் இத்தொழிலில் ஈடுபட்டு வருவது தெரியவந்துள்ளது.
மனித கழிவுகளை மனிதர்களே அகற்றும் நிலை நாட்டில் எந்த அளவுக்கு உள்ளது என்று கண்டறிய நாடு தழுவிய அளவில் ஆய்வு ஒன்று நடத்தப்பட்டு வருகிறது.இதுவரை 18 மாநிலங்களில் 170 மாவட்டங்களில் இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதில் 155 மாவட்டங்களில் ஆய்வுகள் முழுமையாக முடிக்கப்பட்டுள்ளன.நடப்பாண்டு ஜூலை 23 ஆம் தேதி வரை மொத்தம் 14 ஆயிரத்து 678 தொழிலாளர்கள் மனித கழிவுகளை அகற்றும் பணிகளில் ஈடுப்பட்டு வருவது தெரியவந்துள்ளது.உத்தரப்பிரதேசத்தில் அதிகபட்சமாக 11 ஆயிரத்து 247 தொழிலாளர்கள் இந்த தொழிலில் ஈடுபட்டுள்ளனர் என்றும், தமிழகத்தில் 363 பேரும் இதில் ஈடுபட்டு என்றும் புள்ளி விவரங்கள் கூறுகின்றன.
மனித கழிவுகளை அகற்றும் தொழிலாளர்களுக்கு மறுவாழ்வு அளிக்கும் வகையில், சுய தொழில் திட்டத்தை மத்திய சமூக நீதி மற்றும் அதிகாரம் அளித்தல் துறை செயல்படுத்தி வருகிறது. இத்திட்டத்தின் கீழ் உதவித் தொகையாக ஒரு நபருக்கு 4 லட்சம் ரூபாய் உதவித் தொகை அளிக்கப்படுகிறது என்றும், மேலும் சுய தொழில் தொடங்க 15 லட்சம் ரூபாய் வரை குறைந்த வட்டியில் கடன் அளிக்கப்படுவதாகவும் மத்திய அமைச்சர் ராமதாஸ் அத்வாலே தெரிவித்துள்ளார்.மேலும் 3 லட்சத்து 25 ஆயிரம் ரூபாய் முதலீட்டு மானியம் அளிக்கப்படுவதாகவும், மாதம் 3 ஆயிரம் ரூபாய் உதவித் தொகையுடன், சுய தொழில் தொடங்க 2 ஆண்டுகள் பயிற்சி அளிக்கப்படுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார். இந்த தொழிலில் ஈடுபட்டுள்ள தொழிலாளர்களின் குழந்தைகளுக்கு பள்ளி கல்வி கற்க உதவித் தொகை அளிக்கப்படுவதாகவும் நாடாளுமன்றத்தில் கேள்வி ஒன்றுக்கு பதில் அளித்த ராமதாஸ் அத்வாலே தெரிவித்தார்.
Next Story