ராமர் வழியில் - ஆன்மிக சுற்றுலா

இலங்கைக்கு ராமர் பயணம் செய்ததாக கருதப்படும் வழித்தடத்தில் ஆன்மிக சுற்றுலாவுக்கு ரயில்வே துறை ஏற்பாடு செய்துள்ளது.
ராமர் வழியில் - ஆன்மிக சுற்றுலா
x
* இந்தியாவின் இருபெரும் இதிகாசங்களின் ஒன்றான ராமாயணத்தில், பெருமாளின் அவதாரமான ராமர், அயோத்தியில் இருந்து இலங்கை சென்று வந்தது பற்றி கூறப்பட்டுள்ளது. 

* ராமர் பயணம் செய்த வழியில் செல்லும் வகையில், பக்தர்களின் வசதிக்காக 'ராமாயணா ஆன்மிக சுற்றுலா'வை இந்திய ரயில்வே உணவு மற்றும் சுற்றுலா கழகமான ஐ.ஆர். சி.டி.சி. ஏற்பாடு செய்திருக்கிறது .

* டெல்லியில் இருந்து நேபாளம், அயோத்தி, ராமேஸ்வரம், இலங்கை என செல்லும் இந்த சுற்றுலா ரயில்,  நவம்பர் 14ம் தேதியன்று டெல்லியில் புறப்படுகிறது. 

* டெல்லி சப்பிடார் ரயில் நிலையத்தில் புறப்படும் அந்த ரயில், முதலில் அயோத்திக்கு செல்லும். அங்குள்ள ராமர் மற்றும் அனுமன் கோவில்களில் தரிசனம் முடித்து விட்டு நேபாளம் நோக்கி ரயில் 
புறப்படும். 

* சீதா தேவி பிறந்த இடமாக கருதப்படும் நேபாளத்தில் உள்ள 'ஜானக்பூர்' நகருக்கு பக்தர்கள் அழைத்துச் செல்லப்படுவார்கள். அங்குள்ள ஜானகி கோவிலில் சிறப்பு தரிசனம் மற்றும் பூஜைகள் நடைபெறும்

* ஜானக்புரில் இருந்து புறப்பட்டு காசி, பிரயாகை, சித்திரகூட், ஹம்பி போன்ற ஆன்மிக நகரங்கள் வழியாக பயணம் செய்யும் ராமாயண சுற்றுலா ரயில், ராமேஸ்வரத்தை வந்து சேரும்

* ராமேஸ்வரத்தில் ராமநாத சுவாமி கோவில் மற்றும் ராமர் பாதம், கோதண்ட ராமர் கோவில் உள்ளிட்ட முக்கிய இடங்களில் தரிசனத்துக்கு ஏற்பாடு செய்யப்படும்.

* பின்னர், ராமேஸ்வரத்தில் இருந்து சென்னைக்கு அந்த ரயில் வந்து சேரும். மொத்தம் 800 இருக்கைகள் கொண்ட இந்த ரயிலில், சென்னை வரையிலான பயணத்துக்கு கட்டணம் 15 ஆயிரம் ரூபாய். 

* ராமாயண சுற்றுலாவின் அடுத்த கட்டமாக இலங்கைக்கு செல்ல விரும்புவோரை மட்டும், சென்னையில் இருந்து விமானத்தில் அழைத்து செல்ல ஐ.ஆர்.சி.டி.சி. ஏற்பாடு செய்கிறது.

* இலங்கையில் நுவரெலியா, ரம்பொட, சிலாபம் ஆகிய நகரங்கள், ராமாயண காலத்துடன் தொடர்புடையவை என கருதப்படுகின்றன. 

* இலங்கை மத்திய மாகாணத்தின் நுவரெலியா நகரில் 'சீதா எலியா' என்ற இடத்தில் தான், சீதையை ராவணன் சிறைப்பிடித்து வைத்திருந்த அசோக வனம் இருந்ததாக கருதப்படுகிறது. இங்குள்ள சீதை அம்மன் கோவிலில் தரிசனத்துக்கு ஏற்பாடு செய்யப்படும்

* இதுபோல, நுவரெலியா அருகிலேயே உள்ள மற்றொரு நகரான ரம்பொடாவில் தான், ராவணனுக்கு எதிராக போரிடுவதற்கு ராமரின் படை முகாமிட்டிருந்ததாக கூறப்படுகிறது.  

* ராம்படை என்ற பெயர் தான், நாளடைவில் 'ரம்பொட' என மாறியதாகவும் கருதப்படுகிறது. ராமாயண சுற்றுலாவின் ஒரு பகுதியாக, இங்குள்ள அனுமன் கோவிலிலும் தரிசனத்துக்கு ஏற்பாடு செய்யப்படும்.  

 * சிவபக்தரான ராவணனை போரில் கொன்றதால், அந்த தோஷத்தை போக்க, இலங்கையிலேயே சிவனுக்கு தங்கத்தால் சிலை செய்து ராமர் வழிபட்டதாகவும்

* இலங்கையில் 'சிலாபம்' என்ற இடத்தில் உள்ள 'முன்னேஸ்வரம் கோவிலில்' உள்ள சிவன் தான், ராமர் பிரதிஷ்டை செய்த சிலை எனவும் கருதுகின்றனர்.  

* ராமேஸ்வரத்தில் மணலால் சிவன் சிலையை செய்யும் முன்பு, இலங்கையில் சிவன் சிலையை ராமர் செய்ததால் அந்த இடத்துக்கு 'முன்னேஸ்வரம்' என பெயர் வந்ததாகவும் கூறுகிறார்கள். 

* எனவே, ஆன்மிக சுற்றுலாவின் நிறைவு நிகழ்வாக, முன்னேஸ்வரம் கோவிலில் சிவனை தரிசித்து விட்டு, இந்தியா திரும்பும் வகையில் சுற்றுலா திட்டம் வடிவமைக்கப்பட்டுள்ளது. 

* ராமாயண ஆன்மிக சுற்றுலா குறித்த கூடுதல் விபரங்கள் மற்றும் அதில் பங்கேற்பது பற்றிய தகவல்களை ஐ.ஆர்.சி.டி.சி. இணையதளத்தில் பார்க்கலாம் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. 

Next Story

மேலும் செய்திகள்