யோகாசனம் மூலம் உலக சாதனை படைத்த மாணவர்கள் - லிம்கா உலகசாதனை புத்தகத்தில் இடம்

சென்னையில், பள்ளி மாணவர்கள் சிலர், பல்வேறு யோகாசனங்களை செய்து, லிம்கா உலகசாதனை புத்தகத்தில் இடம் பிடித்துள்ளனர். அதுகுறித்த
யோகாசனம் மூலம் உலக சாதனை படைத்த மாணவர்கள் -  லிம்கா உலகசாதனை புத்தகத்தில் இடம்
x
யோகாவின் முக்கியத்துவம் குறித்து மக்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக ஜூன் 21ஆம் தேதி உலக யோகா தினமாக அறிவிக்கப்பட்டது. 

இந்த ஆண்டுக்கான கொண்டாடத்தின் ஒரு பகுதியாக, சென்னை நந்தம்பாக்கத்தில், யோகாசனங்கள் மூலம் லிம்கா சாதனை படைக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் பள்ளி மாணவ மாணவிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு விதவிதமான ஆசனங்களை செய்து உலக சாதனைகள் படைத்தனர். ரக்‌ஷனா ரம்யா என்ற ஏழாம் வகுப்பு மாணவி, தொடர்ந்து 48 நிமிடம் 5 நொடிகளுக்கு ஒற்றைக்காலில் நிற்கும் விருட்சாசனத்தை செய்து, லிம்கா சாதனைப் புத்தகத்தில் இடம் பிடித்தார். இதனைத் தொடர்ந்து, பழனியப்பன் என்பவர், தொடர்ந்து 25 நிமிடங்களுக்கு தனுராசனம் செய்து அசத்தினார். இதற்கு முன்பு 10 நிமிடம் செய்ததே சாதனையாக இருந்தது. பக்காசனா என்ற ஆசனத்தை தொடர்ந்து 2 நிமிடங்கள் 15 விநாடிகளுக்கு செய்த, ஹரிஹரன் என்ற 6ஆம் வகுப்பு மாணவனும் லிம்கா புத்தகத்தில் இடம்பெற்றார். இதற்கு முன்பு இந்த ஆசனம், 90 வினாடிகள் செய்யப்பட்டதே சாதனையாக இருந்தது.

இறுதியாக யோகா பயிற்சியாளர் ஜெயகுமார் தனது மகனுடன் அக்ரோ யோகா தனுராசனத்தை 2 நிமிடம் செய்தார். இவர், கடந்த ஆண்டில் 12 நிமிடங்களில் 108 முறை சூர்ய நமஸ்காரம் செய்து சாதனை படைத்தவர். இதற்கு முன்பு யோகாசனங்களில் பல்வேறு உலக சாதனைகள் படைக்கப்பட்டிருந்தாலும், சென்னையில் மாணவர்களால் நிகழ்த்தப்பட்ட சாதனைகள் முக்கியமானவையாக கருதப்படுகின்றன. உடல் ஆரோக்கியமும், மன ஆரோக்கியமும் வலுப்பெற்று, வாழ்க்கை வளம் பெற, தொடர்ந்து யோகா செய்ய வேண்டும் என யோகா பயிற்சியாளர்கள் வலியுறுத்துகின்றனர். 

Next Story

மேலும் செய்திகள்