கள்ளக்காதல் விவகாரம் - தம்பிக்கு விஷம் கொடுத்த அக்கா
கள்ளக்காதலை தட்டிக் கேட்ட தம்பிக்கு சகோதரியே விஷம் கொடுத்த அதிர்ச்சி விருதுநகர் மாவட்டத்தையே உலுக்கியிருக்கிறது.
சிவகாசி பராசக்தி காலனியில் வசிப்பவர் வள்ளி. திருமணமான வள்ளி, கணவரைப் பிரிந்து வாழ்ந்து வருகிறார். ஒரு அச்சகத்தில் வேலை பார்க்கும் வள்ளிக்கு அய்யப்பன், முருகன் என இரண்டு தம்பிகள். இருவரும் கூலி வேலை பார்க்க, வள்ளி அருகில் உள்ள அச்சகத்தில் வேலை பார்த்து வந்துள்ளார். அச்சக உரிமையாளர் செல்வத்துக்கும் வள்ளிக்கும் எப்படியோ தொடர்பு ஏற்பட அது நட்பாக மாறியுள்ளது. ஏற்கெனவே திருமணமான செல்வம், வள்ளியுடனும் பழகி வந்துள்ளார். இதைக் கேள்விப்பட்ட வள்ளியின் தம்பி முருகன் தனது அக்காவை தட்டிக் கேட்டுள்ளார். பல முறை எச்சரித்துள்ளார். இந்நிலையில்தான் தங்கள் உறவுக்கு தம்பியே எதிரியாவது பிடிக்காததால் செல்வமும், வள்ளியும் முருகனை தீர்த்துக் கட்ட திட்டம் போட்டதாகக் கூறப்படுகிறது.
நேற்று காலை வீட்டில் அசைவ உணவு சமைத்த வள்ளி அதை முருகனையும் அய்யப்பனையும் சாப்பிடச் சொல்லி விட்டு இருக்கன்குடி கோயிலுக்குச் சென்றுள்ளார். சகோதரி சமைத்த அசைவ உணவை எடுத்துக் கொண்டு முருகனும் அய்யப்பனும், தன் நண்பர்களையும் அழைத்துக் கொண்டு மது அருந்தச் சென்றிருக்கிறார்கள். அனைவரும் மது அருந்த ஒரு சிறுவன் உட்பட மூன்று பேர் வாந்தி எடுக்கத் துவங்கியிருக்கிறார்கள். உடனடியாக அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட 15 வயது சிறுவன் கவுதம், முகமது இப்ராஹிம், கணேசன் ஆகிய மூவரும் சிறிது நேரத்திலேயே இறந்து போனர்கள். விஷயம் விபரீதம் ஆக, மாவட்ட காவல்துறை பரபரப்பானது. காவல்கண்காணிப்பாளர் ராஜராஜன் ஏழு தனிப்படைகளை அமைத்து விசாரிக்க உத்தரவிட்டார். இன்னொரு பக்கம் முருகன் தனியாக வீட்டுக்கு வந்து படுத்து விட, மாலையில் அவரும் இறக்க, விசாரணை தீவிரமானது. முதலில் மதுவில் விஷமா என்ற கோணத்தில் விசாரணை சூடு பிடிக்க, இன்னொரு பக்கம் வேறு காரணங்கள் குறித்தும் தனிப்படைகள் விசாரிக்கத் துவங்கினர்.
இந்நிலையில்தான் மருத்துவர்களுடன் காவல்துறை கலந்து பேச, முருகன் கொண்டு வந்த உணவில் விஷம் இருந்தது தெரியவந்துள்ளது. விசாரணை அடுத்த கட்டத்துக்கு நகர, அதில் வள்ளியின் கள்ளக்காதலும், முருகனுக்கு வைக்கப்பட்ட விஷம் மற்றவர்களின் உயிரையும் பறித்த கொடூரமும் வெளியில் வந்துள்ளது. தற்போது வள்ளியும், செல்வமும் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்நிலையில், தற்போது மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனையில் முருகனின் சகோதர அய்யப்பன் உட்பட 6 பேர் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
Next Story