எய்ம்ஸ் மருத்துவமனையில் என்ன இருக்கிறது..?
எய்ம்ஸ் மருத்துவமனையில் என்ன இருக்கிறது..?
அகில இந்திய மருத்துவ அறிவியல் நிறுவனம் எனப்படும் 'எய்ம்ஸ்', கடந்த 1956ம் ஆண்டு டெல்லியில் தொடங்கப்பட்டது. உலக தரத்திலான மருத்துவ வசதிகள் எய்ம்ஸ் மருத்துவமனையில் உண்டு. நாடு முழுவதும் புதிதாக 6 எய்ம்ஸ் கிளைகளை உருவாக்குவதற்காக 2012ம் ஆண்டில் நாடாளுமன்றத்தில் சட்டம் கொண்டு வரப்பட்டது. அதன்படி, மத்திய பிரதேச மாநிலத்தில் போபால், ஒடிஷா மாநிலத்தில் புவனேஸ்வர்,
சத்தீஸ்கர் மாநிலத்தில் ராய்ப்பூர், ராஜஸ்தானின் ஜோத்பூர், பீகாரின் பாட்னா மற்றும் ரிஷிகேஷ் என ஆறு இடங்களில் எய்ம்ஸ் மருத்துவமனையின் கிளைகள் உள்ளன. இதன் தொடர்ச்சியாக,தமிழகம், ஆந்திரா, மேற்கு வங்காளம், மகாராஷ்டிரா, ஆகிய 4 மாநிலங்களில் மேலும் 4 எய்ம்ஸ் கிளைகளை தொடங்க உள்ளதாக, கடந்த 2014ம் ஆண்டில் பா.ஜ.க. அரசு பொறுப்பேற்றதும் அறிவித்தது. அதன்படி, தமிழகத்தில் மதுரை அருகே தோப்பூரில் 200 ஏக்கர் பரப்பளவில் 'எய்ம்ஸ்' மருத்துவமனையின் கிளை அமைய இருக்கிறது.
இந்தியாவிலேயே முதன் முதலில் இருதய மாற்று அறுவை சிகிச்சை வெற்றிகரமாக செய்யப்பட்டது, டெல்லியில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையில் தான். அந்த சிகிச்சையை செய்தவர் டாக்டர் வேணுகோபால் என்ற தமிழர். இதுபோல, ஸ்டெம் செல் தெரபி மற்றும் சிறுநீரக துறை சிகிச்சையில் உலக அளவில் முன்னோடி மருத்துவமனையாக எய்ம்ஸ் திகழ்ந்து வருகிறது. இந்தியாவில் செயற்கை குழாய் குழந்தை வசதி அறிமுகமான முதல் அரசு மருத்துவமனையும் எய்ம்ஸ் தான். 2008ம் ஆண்டில் இந்த வசதி அறிமுகமானது. ரோபோட்டிக் அறுவை சிகிச்சை, டிஎன்ஏ பரிசோதனை கூடம் உள்ளிட்ட வசதிகள் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் உண்டு.
கடந்த 2012ம் ஆண்டில் 330 ஏக்கர் பரப்பளவில் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனை விரிவாக்கம் செய்யப்பட்டது. மருத்துவ சிகிச்சையில் உறுப்பு மாற்று, இருதய பிரிவு உட்பட 50க்கும் மேற்பட்ட துறைகளில் சூப்பர் ஸ்பெஷாலிடி வசதியை கொண்டது, எய்ம்ஸ் மருத்துவமனையாகும். சாமானியனும், பெரும் பணக்காரர்களும் சிகிச்சை பெறக்கூ டிய வகையில் இலவச சிகிச்சையும், மத்திய அரசால் நிர்ணயம் செய்யப்பட்ட சலுகைக் கட்டண அடிப்படையிலான சிகிச்சையும் வழங்கப்படுகிறது.
எய்ம்ஸ்' மருத்துவமனையில், தனியார் மருத்து வமனையைப் போல வசதியாக அமர்ந்து சிகிச்சை பெற ஆயிரத்து 700 ரூபாய், ஆயிரத்து ,100 ரூபாய் கட்டண அடிப்படையில் 'ஏ' கிளாஸ், 'பி' கிளாஸ் வார்டுகள் தனியாக இருக்கின்றன.டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் ஆண்டுக்கு ஒரு லட்சத்து 10 ஆயிரம் பேர் இதய சிகிச்சை பெறுகின்றனர். 4 ஆயிரத்து 600 பேர் இதய அறுவை சிகிச்சை செய்து கொள்கின்றனர்.
1984ம் ஆண்டில் முன்னாள் பிரதமர் இந்திராகாந்தி சுடப்பட்டபோது, எய்ம்ஸ் மருத்துவமனையில் தான் அனுமதிக்கப்பட்டார். கடந்த 2009ம் ஆண்டில் அப்போதைய பிரதமர் மன்மோகன் சிங்கும், 'எய்ம்ஸ்' மருத்துவமனையில் தான் அறுவை சிகிச்சை செய்து கொண்டார். அதே நேரத்தில், எய்ம்ஸில் காலியாக இருக்கும் படுக்கைகள் அடிப்படையிலேயே நோயாளிகள் சிகிச்சைக்கு அனுமதிக்கப்படுவர். மற்றவர்கள் காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்படுவர்.
இங்கு பணிபுரியும் மருத்துவர்கள், தனியார் மருத்துவமனைகளுக்கு பணிபுரிய செல்லக்கூடாது. இவர்களுக்கான வீடுகள் மருத்துவமனை வளாகத்திலேயே அனைத்து கொடுக்கப்படும். தமிழகத்துக்கு எய்ம்ஸ் வருவதால், கூடுதலாக எம்பிபிஎஸ் சீட்டுகளும், ஸ்பெஷாலிட்டி மற்றும் சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவ படிப்பு சீட்டுகளும் கிடைக்க வாய்ப்புள்ளது. மத்திய அரசு 'எய்ம்ஸ்' மருத்துவமனைக்காக ஆண்டுதோறும் ஆயிரத்து 96 கோடி ரூபாய் பணம் செலவழிக்கிறது.
Next Story