பள்ளிக்கல்வி துறையின் அதிரடி மாற்றங்கள் : ஆசிரியர்களின் கருத்து என்ன...?
பாடத்திட்டங்கள் மாற்றம், தேர்வுகளில் மாற்றம், நீட் தேர்வு பயிற்சி, சீருடைகள் மாற்றம் என பள்ளிக்கல்வி துறையின் அதிரடி மாற்றங்கள் குறித்து ஆசிரியர்களின் கருத்து என்ன...?
பள்ளிக்கல்வி துறையின் அதிரடி மாற்றங்கள் : ஆசிரியர்களின் கருத்து என்ன...?
11 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வில், மொழிப்பாடத்தேர்வுகள் ஒரே தாளாக குறைக்கப்பட்டுள்ளன. மாணவர்களின் மன அழுத்தத்தை குறைப்பதற்காகவே இந்த மாற்றம் மேற்கொள்ளப் பட்டுள்ளதாக பள்ளிக் கல்வித்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டது. அப்படியானால் அவர்களை விட வயது குறைவான ஒன்பது மற்றும் பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு இந்த மாற்றத்தை கொண்டு வராதது ஏன் என கேள்வி எழுப்புகின்றனர் ஆசிரியர்கள்... மொழிப்பாடத்தின் அவசியத்தை உணர்த்தும் ஆசிரியர்கள், அரசு , செலவை குறைக்கவே இந்த முடிவை எடுத்துள்ளதாகவும் குற்றம் சாட்டுகின்றனர்.
அதேபோல, ஆங்கில வழிக்கல்விக்கு 15 மாணவர்களுக்கு மேல் இருந்தால் தான், ஆசிரியர் என்ற அறிவிப்பையும் ஆசிரியர்கள் கடுமையாக எதிர்க்கின்றனர்.
அடுத்த முக்கிய பிரச்சினை, 11ம் வகுப்பு மாணவர்களுக்கு இன்னும் பாடப்புத்தங்கள் வழங்கப்படவில்லை என்பதே... பள்ளி திறக்கும் முன்பே பாடப்புத்தங்களை அச்சிடாதது ஏன் என கேள்வி எழுப்பும் ஆசிரியர்கள், இதனால் மாணவர்கள் சந்தித்து வரும் பிரச்சினைகளையும் எடுத்துரைக்கின்றனர்.
தேர்வு முடிவுகளில் வெளிப்படையற்ற தன்மை என்பது ஆசிரியர்கள் முன்வைக்கும் மற்றொரு குற்றச்சாட்டு .அரசியல் காரணங்களுக்காக தேர்ச்சி விழுக்காட்டை உயர்த்தி காண்பித்து மாயத்தோற்றத்தை ஏற்படுத்துவதாக குற்றம்சாட்டும் ஆசிரியர்கள், மாணவர்களின் எதிர்காலம் கேள்விக்குறியாகும் என அச்சம் தெரிவிக்கின்றனர்.
நாட்டின் எதிர்காலமாக விளங்கும் மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு, பள்ளிக்கல்வி துறையில் ஏற்பட்டுள்ள இதுபோன்ற குழப்பங்களை தீர்க்க உடனடியாக அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும் என்பதே ஆசிரியர்கள், மாணவர்களின் கோரிக்கையாக உள்ளது...
Next Story