விசுவாசத்திற்கு எடுத்துக்காட்டாக வாழ்ந்த நாய் பலி
பாம்புகளை விரட்டி எஜமானர்களை இதுவரை காத்து வந்த, ஜூலி என்கிற நாய் பாம்பு கடித்து, உயிரிழந்தது.
தருமபுரி மாவட்டம் வெள்ளாளப்பட்டி கிராமத்தை சேர்ந்த ரமணிகுமார் - இளவரசி தம்பதியருக்கு நாய்கள் மீது தனிப்பட்ட பிரியம். இதன் காரணமாகவே ஜூலி, கருவாச்சி, ஜிம்மி என்ற 3 நாட்டு நாய்களை வளர்த்து வருகின்றனர். நாட்டு நாய்களான இந்த மூன்றுமே துறுதுறுப்பாக சுற்றி வருவதுடன், வீட்டை பாதுகாக்கும் அரணாகவே இருந்து வந்தது.
இவர்களின் வீடு தோட்டப் பகுதியில் இருப்பதால் அடிக்கடி பாம்புகள் வருவதுண்டு. ஆனால் வீட்டிற்கு வரும் பாம்புகளை வாசலிலேயே வழிமறித்து அதனை விரட்டியடிப்பதும், கொன்று போடுவதும் இந்த 3 சுட்டிகள் தான். அதிலும் 7 வயதான ஜூலி என்ற நாய் சுட்டித்தனமாகவும், விசுவாசமாகவும் இருக்கும். இதுவரை வீட்டிற்குள் நுழைய வந்த பாம்புகளை தடுத்து நிறுத்தியதில் கில்லியாகவே இருந்திருக்கிறது. சரியாக கடந்த 2 வருடங்களுக்கு முன்பு நல்ல பாம்பை விரட்டியடித்த ஜூலியை பற்றி ஏற்கனவே நாம் செய்தி வெளியிட்டு இருந்தோம்.
பாம்பை லாவகமாக பிடித்து அதை கடித்தே கொன்று தன் வீட்டு எஜமானர்களை பாதுகாத்து வந்த ஜூலி அவர்கள் வீட்டில் செல்லப்பிள்ளையாகவே இருந்து வந்தது. இந்த நிலையில் தான் ரமணிகுமார் வீட்டிற்கு கட்டு விரியன் பாம்பு ஒன்று வந்துள்ளது. தன் எஜமானி இளவரசியை கடிக்க முயன்ற பாம்பை துணிச்சலோடு எதிர்த்து நின்றது ஜூலி. இரவு நேரத்தில் வந்த இந்த பாம்பை தடுத்து நிறுத்திய ஜூலி, பல மணி நேரமாக போராடி அதை கொன்றிருக்கிறது. ஆனால் கட்டு விரியன் கடித்ததில் ஜூலியும் பலியானதால் ரமணிகுமாரின் குடும்பம் சோகத்தில் ஆழ்ந்துள்ளது.
விவசாய நிலத்திற்குள் கால்நடைகள் நுழையாமல் இருக்க அவற்றை தடுக்கும் பணியையும் ஜூலி செய்து வந்துள்ளது. இதனால் வெள்ளாளப்பட்டி கிராமத்தின் செல்லப்பிள்ளையாகவே ஜூலி இருந்து வந்தது. ஆனால் இன்று விசுவாசத்திற்காக தன் உயிரையும் விட்ட ஜூலியின் நினைவு அதை சார்ந்தவர்களின் மனதில் எப்போதும் நிலைத்திருக்கும்.
Next Story