"விஞ்ஞானி ஏ.ஆர். ரஹ்மான்"..பார்த்திபன் நெகிழ்ச்சி...!
'இரவின் நிழல்' படத்தின் பாடலுக்காக ஸ்ரேயா கோஷலுக்கு தேசிய விருது கிடைத்துள்ள நிலையில், இயக்குநர் பார்த்திபன் வெளியிட்ட ஆடீயோ பதிவொன்று வைரலாகிவருகின்றது.... அது குறித்து விளக்குகிறது இந்த சிறப்புத் தொகுப்பு....
பல ஆண்டுகளாக தமிழ் சினிமாவில் உள்ள விருது அரசியலை, பொது மேடையில் பட்டென போட்டுடைத்தவர்தான் நடிகரும், இயக்கநருமான பார்த்திபன்...! தன் படைப்புக்கு அங்கீகாரம் கிடைக்கவில்லை என ஆதங்கப்பட்ட, அந்த பன்முக கலைஞனின் திரைப்படத்துக்கு மீண்டும் ஒரு தேசிய விருது கிடைத்துள்ளது...!
குடைக்குள் மழை, கதை திரைக்கதை வசனம் இயக்கம், ஒத்த செருப்பு, என அவர் இயக்கிய ஒவ்வொரு படமும் தமிழ் சினிமாவின் தனித்த அடையாளமாக மாறியது. அந்த வரிசையில் அவர் இயக்கத்தில் வெளியான படம்தான் இரவின் நிழல். நான் லீனியர் கதை, சிங்கிள் ஷாட் என, கோலிவுட் சினிமா முயற்சித்து பார்க்காத ஒன்றை தைரியமாக கையிலெடுத்து, வித்தை காட்டியிருந்தார். அதில் இடம்பெற்ற மாயவா, தூயவா பாடலை பாடியதற்காகத்தான் பாடகி ஸ்ரேயா கோஷலுக்கு சிறந்த பின்னணி பாடகிக்கான தேசிய விருது கிடைத்துள்ளது...
தேசிய விருது கிடைத்தவுடன் பூரித்து போன பார்த்திபன், ஒரு ஆடீயோ ஒன்றை வெளியிட்டு, படத்தின் வெற்றிக்கு காரணமான விஞ்ஞானி ஏ.ஆர். ரஹ்மானுக்கு நன்றி என கட்டுக்கடங்காத மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார்
தேசிய விருது பெற்றதற்காக நன்றி தெரிவித்து ஆடியோ வெளியிட்ட பார்த்திபன்
"120 சர்வதேச விருதுகள் எல்லாமே கிடைத்தும் கூட , நம் தேசிய விருது என்கிற போது அதன் மீது மிகப்பெரிய எதிர்பார்ப்பு இருந்தது. அதில் என்னுடைய படத்தின் பெயர் இருப்பது மகிழ்ச்சி" என்றும் கூறியுள்ளார் பார்த்திபன்...
சந்திராயன் விண்கலம் வெற்றிகரமாக நிலவின் வடகோடியில் இறங்கியதையும், தன் படத்துக்கு தேசிய விருது கிடைத்தையும் இணைத்து பேசியிருப்பதால் இந்த ஆடீயோ பதிவு சமூகவலைதளத்தில் தற்போது வைரலாகி வருகின்றது....