முடிவுக்கு வராத பருத்தி வீரன் பஞ்சாயத்து... இயக்குனர் அமீருக்கு ஆதரவாக குரல் கொடுத்த பிரபலங்கள்
பெண் ரசிகர்களை சூர்யா பக்கம் ஈர்த்த கதாபாத்திரங்களுள் ஒன்று 'மௌனம் பேசியதே' கௌதம். இந்த படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் தான், அமீர்.
அடுத்து நடிகர் கார்த்தியின் அறிமுக படமா இது ? என நம்ப முடியாத அளவிற்கு ரசிகர்கள் கொண்டாடிய 'பருத்திவீரன்' படத்தை கொடுத்தவரும் இயக்குனர் அமீர் தான்.
கார்த்தியின் 25வது படமான ஜப்பான் விழாவில், அவரை அறிமுகப்படுத்திய இயக்குனர் அமீருக்கு அழைப்பு விடுக்கப்படாதது ஏன் என்று தொடங்கிய விவாதம்? தற்போது 16 ஆண்டுகளுக்கு முன்பு வெளியான பருத்திவீரன் படத்தின் மூலம் பெரும் சர்ச்சையாக உருவெடுத்துள்ளது.
பருத்திவீரன் படத்தை 2 கோடியே 75 லட்சம் ரூபாய் பட்ஜெட்டில் முடிப்பதாக கூறிவிட்டு, 4 கோடியே 80 லட்சம் ரூபாய்க்கு கணக்கு காட்டியதாக இயக்குனர் அமீர் மீது தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா தரைகுறைவான விமர்சனங்களை முன் வைத்தது, கோலிவுட்டில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது.
ஆனால் இயக்குனர் அமீர் தரப்பிலோ... ஞானவேல் ராஜா பாதியிலேயே கைவிரித்ததால் நண்பர்களிடம் கடன் வாங்கி மீதி தயாரிப்பு பணியை தான் மேற்கொண்டதாகவும், ஆனால் பிறகு ஞானவேல் ராஜா படத்தை தாமே வெளியிடுவதாக கூறி படத்தை தன்னிடம் இருந்து பெற்றுக் கொண்டு விட்டு, பேசிய படி பணம் தரவில்லை என்றும் சொல்லப்படுகிறது.
இது தொடர்பான வழக்கு கடந்த 16 ஆண்டுகளாக நீதிமன்றத்தில் நடந்து வருகிறது.
குறிப்பாக அன்றைய முதலமைச்சர் கருணாநிதி கூறியதாக பொய் கூறி, அவரது பெயரை பயன்படுத்தி, படத்தை ஞானவேல் ராஜாவிடம் கொடுக்குமாறு தாம் மிரட்டப் பட்டதாகவும் அமீர் கூறி இருப்பதாக வெளியாகியிருக்கும் தகவல் பெரும் சர்ச்சை ஏற்படுத்தியுள்ளது.
இயக்குனர் அமீர் குறித்து ஞானவேல் ராஜா பேசியதற்கு, இயக்குனர்கள் சசிகுமார், சமுத்திரக்கனி, கரு.பழனியப்பன், பொன்வண்ணன், பாரதிராஜா மற்றும் கவிஞர் சினேகன் உள்ளிட்டோர் கடும் கண்டனம் தெரிவித்து, அமீருக்கு ஆதரவாக குரல் கொடுத்தனர்.
அதுபோல்... அமீரின் 'ராம்' படத்தின் மேக்கிங் சரி இல்லை என்று இயக்குனர் சுதா கொங்கரா கூறியதாகவும், மௌனம் பேசியதே படத்தை தயாரித்த தயாரிப்பாளர் முதலில் அமீரின் படத்தை தயாரிக்க தயக்கம் காட்டியதாகவும் ஞானவேல் ராஜா கூறியிருந்தார்.
இந்நிலையில், அவர்கள் இருவருமே ஞானவேல் ராஜா கூறியதை மறுத்து, இயக்குனர் அமீருக்கு ஆதரவாக கருத்து தெரிவித்துள்ளனர்.
பருத்திவீரன் பட்ஜெட் தொடர்பாக இயக்குனர் அமீர் பொய் கணக்கு கூறுவதாக ஞானவேல் ராஜா குற்றம் சாட்டும் நிலையில், பட்ஜெட் அதிகரித்ததற்கான காரணத்தை முன்னரே இயக்குனர் அமீர் தாம் அளித்த பேட்டி ஒன்றில் விளக்கி இருந்தார்.
2005ல் தாம் பருத்திவீரன் படப்பிடிப்பை தொடங்கிய போது, தொடர்ந்து பெய்த மழையால் தள்ளிப்போன படப்பிடிப்பு, படம் முடிந்த பிறகு, முத்தழகு கதாபாத்திரமே ஓங்கி இருந்ததால், பருத்திவீரன் கதாபாத்திரத்துக்கு வலு சேர்க்கும் விதமாக கூடுதல் காட்சிகளை மீண்டும் படம் பிடித்ததால் பட்ஜெட் அதிகரித்ததாகவும் அமீர் தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில், தற்போது இயக்குனர் அமீர் குறித்து தான் பேசியதற்கு தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா வருத்தம் தெரிவித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்...
ஆனாலும் பஞ்சாயத்து முடிந்த பாடாக இல்லை....ஞானவேல் ராஜாவின் அறிக்கைக்கு பதில் அறிக்கை கொடுத்துள்ள சசிக்குமார் போலியான வருத்தத்திற்கு உண்மையை பலிகொடுக்க முடியாது என்று தொடர்புள்ளி வைத்துள்ளார்.