`புல்டோசர்' கேங்.. NASA டேட்டா... கதறவிடும் Demolition Man - இன்று நாகார்ஜுனா... நாளை..?
நடிகர் நாகார்ஜுனாவுக்கு சொந்தமான அரங்கம் இடிக்கப்பட்டதை தொடர்ந்து நாடு முழுவதும் பேசப்படும், ஏரிகளை காக்கும் புல்டவுசர் ஆக்ஷன் குறித்து விவரிக்கிறது இந்த தொகுப்பு....
கொஞ்சம் அதிகம் மழை பெய்தால் மிதக்கும் நகரங்களில் ஒன்றுதான் ஐதராபாத். வழக்கம்போல் நகரம் விரிவாகும் போது நீர்நிலைகள் விழுங்கப்படுவதில் ஐதராபாத்தும் விதிவிலக்கு அல்ல...
நகரில் 1979 தொடங்கி 44 ஆண்டுகளில் சுமார் 61 % நீர்நிலைகள் ஆக்கிரமிக்கப்பட்டிருப்பதாக தரவுகள் தெரிவிக்கின்றன. ஆய்வு செய்யப்பட்ட 56 ஏரிகளின் மொத்த பரப்பளவு 40.35 சதுர கிலோமீட்டரிலிருந்து வெறும் 16 சதுர கிலோமீட்டராக சுருங்கிவிட்டது. சமீபத்தில் மழை பெய்தும் 426 நீர்நிலைகளில் தண்ணீர் இல்லை.... நீர்வழிப்பாதைகள் அடைக்கப்பட்டதே இதற்கு காரணம் என சொல்லப்பட்டது.
வெள்ளம்... குடிக்க நீரில்லாத வறட்சி என்ற தவிப்பில் ஆக்கிரமிப்புகளை அகற்ற ஜூலையில் ஐதராபாத் பேரிடர் மீட்பு, இயற்கை அரண்கள் கண்காணிப்பு, பாதுகாப்பு முகமையை உருவாக்கியது தெலங்கானா காங்கிரஸ் அரசு...
அன்றிலிருந்து ஐதராபாத்தில் எங்கெல்லாம்... நீர்நிலைகள் ஆக்கிரமிக்கப்பட்டிருக்கிறதோ... அங்கெல்லாம் புல்டவுசரோடு சென்று ஆக்கிரமிப்புகளை இடித்து தள்ளுகிறது முகமை...
1770-ல் மன்னர் குடும்பத்திற்காக வெட்டப்பட்ட 104 ஏக்கர் பரப்பளவு கொண்ட பம் ருக்ன் உத் தௌலா ஏரியில் 70 % ஆக்கிரமிக்கப்பட்டது தெரியவந்தது. அங்கு, சட்டவிரோத கட்டிடங்களை இடித்த ஏரிகள் பாதுகாப்பு முகமையால், 7 ஏக்கர் நிலத்தை மீட்க முடிந்தது. காந்திபேடை ஏரியிலும் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டன.
இதுபோல் ஆக்ஷனில் இறங்கிய ஏரிகள் பாதுகாப்பு முகமை கண் மாதப்பூரில் உள்ள தும்மிடிகுண்டா ஏரி மீது விழுந்தது.
வானுயர்ந்த கட்டிடங்களுக்கு மத்தியில் குட்டையாக காட்சியளித்த ஏரியை சுற்றிய ஆக்கிரமிப்புகளை அகற்ற தொடங்கியது. நாகார்ஜுனாவின் N Convention அரங்கம் இடித்து தள்ளப்பட்டது.
அரங்கம் ஏரியின் ஒரு பகுதியையும், buffer zone பகுதியையும் ஆக்கிரமித்து உருவாக்கப்பட்டுள்ளது என்றும் அதனால் மழை பெய்தால் குடியிருப்பு பகுதிகளில் வெள்ளம் ஏற்படுவதாக கூறி அரங்கம் காலியாக்கப்பட்டிருக்கிறது. 4 ஏக்கர் பரப்பளவில் அரங்கம் இருந்ததாகவும்... அது இடிக்கப்பட்டிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
ஆனால்... நிலம் ஆக்கிரமிக்கப்படவில்லை என நடிகர் நாகார்ஜூனா விளக்கம் அளித்துள்ளார். பட்டா நிலத்திலே அரங்கம் கட்டியதாகவும், ஒரு அங்குல இடத்தை கூட தான் ஆக்கிரமித்தது இல்லை எனவும் சொல்லியிருக்கும் அவர், ஒரு நோட்டீஸ் கூட கொடுக்கவில்லை.. நீதிமன்றம் சொல்லியிருந்தால் நானே இடித்திருப்பேன் எனவும்... இவ்விவகாரத்தில் நீதிமன்றத்தை நாடப்போவதாக சொன்னவர், கட்டிடத்தை இடிக்க தடையும் வாங்கிவிட்டார்.
ஆனால்... கட்டிடம் ஏற்கனவே தகர்க்கப்பட்டுவிட்டது.
கட்டிடம் சட்டவிரோதமாக கட்டப்பட்டது என ஐதராபாத் பேரிடர் மீட்பு, இயற்கை அரண்கள் கண்காணிப்பு, பாதுகாப்பு முகமையின் தலைவராக இருக்கும் ஐபிஎஸ் அதிகாரி ரங்காநாத் தெரிவித்தார்.