நடிகர் அஜித் குமார் உடல்நிலை எப்படி உள்ளது..? - வெளியான லேட்டஸ்ட் அப்டேட்
விடாமுயற்சி திரைப்படத்தின் அடுத்தகட்ட படப்பிடிப்பிற்காக, நடிகர் அஜித்குமார் வெளிநாடு செல்லவிருந்த நிலையில், அதற்கு முன்னதாக வழக்கமான பரிசோதனை மேற்கொள்வதற்காக மருத்துவமனைக்கு சென்றிருந்தார். அப்போது, அவரது காதுக்கு அருகே மூளைக்குச் செல்லக் கூடிய நரம்பில் சிறிய வீக்கம் இருந்தது கண்டறியப்பட்டது. எனினும், வீக்கத்திற்கு சுமார் ஒரு மணி நேரத்திற்குள் சிகிச்சையளித்து விடலாம் என மருத்துவர்கள் அறிவுறுத்தியதன் பேரில், அஜித்குமார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதனடிப்படையில், மருத்துவர்கள் சிகிச்சையளித்த பின்னர் அவர் சாதாரண வார்டுக்கு மாற்றப்பட்டார். இதைத் தொடர்ந்து, ஓய்வில் இருக்கும் அவர் இன்று அல்லது நாளை வீடு திரும்புவார் என தகவல் வெளியாகியுள்ளது. மேலும், அடுத்த வாரம் அஜர்பைஜானில் நடக்கக்கூடிய விடாமுயற்சி படப்பிடிப்பில் நடிகர் அஜித்குமார் கலந்து கொள்வார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.