ஒளிப்பதிவாளர் கண்ணன் மரணம் - பாரதிராஜாவின் ஆஸ்தான கேமரா கலைஞர்...

தமிழ் சினிமா ஒளிப்பதிவாளரான பி.கண்ணன், இதய பாதிப்பு காரணமாக தனது 69ஆவது வயதில் உயிரிழந்துள்ளார்.
ஒளிப்பதிவாளர் கண்ணன் மரணம் - பாரதிராஜாவின் ஆஸ்தான கேமரா கலைஞர்...
x
தன் முகத்தை வெளிக்காட்டாமல் திரை வழியே உலகத்தைக் காட்டிய ஒப்பற்ற ஒளிப்பதிவாளர்களில் ஒருவர்தான் கண்ணன். இயக்குநர் பாரதிராஜாவின் கண்கள் என்றே இவருக்கு ஒரு செல்லப்பெயர் உண்டு. இந்த இரு கலைஞர்களுக்கும் இடையிலான நட்பு 1980ஆம் ஆண்டு வெளி வந்த நிழல்கள் படத்தில் தொடங்கியது. இதன் பிறகு பாரதிராஜாவின் அலைகள் ஓய்வதில்லை, மண்வாசனை, கடலோரக் கவிதைகள் போன்ற படங்களில் கிராமங்களின் அழகை வெள்ளித்திரைக்கு அள்ளி வந்தது கண்ணனின் கேமரா. மலையாளத்திலும் தெலுங்கிலும் சேர்த்து ஒன்பது படங்களுக்கு ஒளிப்பதிவு செய்திருக்கும் கண்ணன், தமிழில் 33 படங்களில் பணியாற்றியிருக்கிறார். அதில் 22 படங்கள் பாரதிராஜாவின் படங்கள்தான். எண்பதுகளின் சினிமாவில் புதுமைகளை படைத்த கண்ணனின் கேமரா, நவீன காலத்திலும் சளைக்காமல் சாதனை படத்தது. பாரதிராஜாவைத் தாண்டி எல்லா அசல் கலைஞர்களுக்குமே கண்ணனின் காட்சிப் பதிவுகளோடு ஒரு காதல் உண்டு. அதனால்தான் கவிப்பேரரசு வைரமுத்து, கண்ணனின் மறைவால் உலகமே ஒரு கணம் நிறமிழந்துவிட்டதாகச் சொல்லியிருக்கிறார். தனது தேசியவிருது பாடல்களில் இரண்டை ஒளிபெயர்த்தவர் என்றும் கண்ணனை அவர் நினைவு கூர்ந்திருக்கிறார். பொதுவாக தமிழ் சினிமாவில் வாரிசுகளாக களம் இறங்குகிறவர்கள் பலரும் அந்த அடையாளத்தோடுதான் கடைசி வரை அழைக்கப்படுவார்கள். ஆனால், புகழ் பெற்ற இயக்குநர் பீம்சிங்கின் மகன் என்பதை விட, ஒளிப்பதிவாளர் கண்ணனாகவே தன்னை நிலைநிறுத்திக் கொண்ட கலைஞர் இவர். பெயரிலேயே கண் வைத்திருந்த இந்த ஒளிஓவியர் தமிழ் சினிமாவில் வகித்த இடம் சதாரணமானது அல்ல.

Next Story

மேலும் செய்திகள்