நடிகர் கார்த்தியின் புது படத்தின் படப்பிடிப்பிற்கு இந்து அமைப்புகள் எதிர்ப்பு
நடிகர் கார்த்தியின் புது படத்தின் படப்பிடிப்பிற்கு இந்து அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்ததால் திண்டுக்கலில் பெரும் பதற்றமான சூழல் உருவானது.
சில காரணங்களுக்காக, சில திரைப் படங்களுக்கு மத அமைப்புகள், அரசியல் கட்சிகள் எதிர்ப்பு தெரிவிப்பது தொடர் கதையாகவே உள்ளது. விருமாண்டி, பாபா, விஸ்வரூபம், பத்மாவதி உள்ளிட்ட பல படங்களும் பெரும் போராட்டத்திற்கு பின்பே வெளியானது.
படம் வெளியாகும் போது ஏற்பட்டு வந்த இது போன்ற பிரச்சினைகள் சமீபகலமாக போஸ்டர் வெளியாகும் போதும் படப்பிடிப்பு நடக்கும் போதும் நடைபெற துவங்கியுள்ளன.திண்டுக்கல் மலைக்கோட்டையில் நடைபெற்ற நடிகர் கார்த்தியின் புதிய படத்தின் படப்பிடிப்பு இந்து அமைப்புகளின் எதிர்ப்பு காரணமாக பாதியில் நிறுத்தப்பட்டது.
ஏன்... எதற்காக இந்த எதிர்ப்பு...?
கைதி படத்தை முடித்த கையொடு ரெமோ பட இயக்குநரோடு கைகோர்த்திருக்கிறார் நடிகர் கார்த்தி.கார்த்தியின் இந்த புதிய படத்திற்கு சுல்தான் என பெயரிடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. பல வரலாற்று போர்களையும், சுதந்திர போராட்ட வடுக்களையும் தாங்கி நிற்கிறது திண்டுக்கல் மலைக்கோட்டை. நாயக்கர்கள், பாண்டியர்கள், முகலாயர்கள், ஆங்கிலேயர்கள் என பலரும் ஆட்சி செய்த இந்த மலைக்கோட்டையில் பத்மகிரி ஈஸ்வரர் கோவில் கட்டப்பட்டு பக்தர்களால் வழிபாடு செய்யப்பட்டு வந்தது.
இந்த நிலையில் ஹைதர் அலி ஆட்சி காலத்தில் பாதுகாப்பு கருதி மலைக்கோட்டையில் இருந்த பத்மகிரி ஈஸ்வரர் உள்ளிட்ட சுவாமிகளின் சிலைகள் திண்டுக்கல் நகருக்கு மாற்றப்பட்டது. இதனால் திண்டுக்கல் மலைக்கோட்டையில் வெறும் கோவில் மட்டுமே உள்ளது அங்கு சாமி சிலைகள் கிடையாது. மலைக்கோட்டையில் மீண்டும் பத்மகிரிஸ்வரர் அபிராமி அம்மன் சிலைகளை வைத்து வழிபாடு நடத்த வேண்டும் என இந்து அமைப்புகள் பல ஆண்டுகளாக மத்திய மாநில அரசிடம் முறையிட்டு வருகின்றனர். அதேபோல் பௌர்ணமி தினத்தன்று மலைக் கோட்டையை சுற்றி கிரிவலம் வரும் பொழுது கோவிலுக்குச் சென்று வழிபாடு செய்யவும் தொடர்ந்து அனுமதி கோரி வருகின்றனர். அதற்கு அரசும் அறநிலையத்துறையும் அனுமதி வழங்கவில்லை. இந்த நிலையில் ஹைதர்அலியின் வாழ்க்கை வரலாறை மையமாக கொண்டு நடிகர் கார்த்தி நடிக்கும் சுல்தான் திரைப்படத்தின் படபிடிப்பு திண்டுக்கல் மலைக்கோட்டையில் நடைபெற்று வந்துள்ளது. இதனை அறிந்த, பா.ஜ.க. - இந்து முன்னணி, இந்து மக்கள் கட்சி, சிவசேனா உள்ளிட்ட இந்து அமைப்புகள் படப்பிடிப்பு நடத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்து மலைக்கோட்டையை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம் நடத்தினர். இதனையடுத்து போலீசார் பேச்சுவார்த்தை நடத்தியதையடுத்து படபிடிப்பு நிறுத்தப்பட்டது. மலைக்கோட்டையிலிருந்து படப்பிடிப்பு குழுவினர் அனைவரும் உடனடியாக வெளியேற்றப்பட்டனர். இதனை தொடர்ந்து
போராட்டத்தை கைவிட்டு இந்து அமைப்பினர் கலைந்து சென்றதையடுத்து அப்பகுதியில் நிலவிய பதட்டம் தணிந்தது.
Next Story