சமூக கருத்துக்களை தொடர்ந்து கூறும் நடிகர்கள் : சமூக அக்கறையா அல்லது பட விளம்பரமா?
நடிகர்கள் சமூக கருத்துக்களை முன் வைப்பதும், அது சர்ச்சையாவதும் தொடர்ந்து வருகிறது.
நடிகர்கள் சமூக கருத்துக்களை பேசுவது வாடிக்கையான ஒரு விவகாரம். அரசியலுக்கு வருவதற்கான முன்னோட்டமாக நடிகர்கள், இதை செய்கிறார்கள் என பலர், விமர்சனம் செய்வதும் உண்டு. சமீப காலமாக அரசியல் என்பதை தாண்டி, நடிகர்கள் தொடர்ந்து சமூக செயல்பாடுகளில் ஈடுபடுவதும், சமூக கருத்துக்களை பேசியும் வருகிறார்கள். அவ்வாறு நடிகர்களின் கருத்துக்கள் பல நேரங்களில் சர்ச்சையை கிளப்பி வருகின்றன.
நடிகர்கள் ரஜினி, கமல், விஜய், சூர்யா, விஜய் சேதுபதி, விஷால் என பல உச்சகட்ட நட்சத்திரங்கள், தாங்கள் பங்கேற்கும் விழாக்களில், சமூக பிரச்சினைகள் குறித்து அவ்வப்போது கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். அப்படி பேசி, சில சமயம் அவர்கள், சர்ச்சைகளில் சிக்கிக் கொள்வதும் உண்டு. அண்மையில் நடிகர் சூர்யா, நீட் விவகாரம், இந்தி திணிப்பு, சகிப்பு தன்மை, கருத்து சுதந்திரம் என பல்வேறு விவகாரங்களில் தனது கருத்துக்களை தெரிவித்துள்ளார். சில நாட்களுக்கு முன் புதிய தேசிய கல்வி கொள்கை பற்றி அவர் பேசியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்நிலையில் தற்போது பேனர் விவகாரம் தொடர்பான சூர்யாவின் கருத்து வரவேற்பை பெற்றுள்ளது. பள்ளிக்கரனையில் கடந்த வாரம் பேனர் சரிந்து, இளம்பெண் சுபஸ்ரீ உயிரிழந்தார். இந்த சம்பவம், தமிழகம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்த பேனர் விவகாரம் தொடர்பாக, பல்வேறு தரப்பினரும் தொடர்ந்து, கண்டனம் தெரிவித்து வருகின்றனர். அரசு அதிகாரிகள் மற்றும் கட்சிகளுக்கு சரமாரியாக கேள்விகளை எழுப்பி, உயர்நீதிமன்றமும் கண்டனம் தெரிவித்தது. அதிமுக, திமுக உள்ளிட்ட அரசியல் கட்சிகளும், பேனர்கள் வைக்க வேண்டாம் என தொண்டர்களுக்கு எச்சரிக்கை விடுத்தன.
இந்நிலையில் கமல், விஜய, சூர்யா போன்ற நடிகர்களும் பேனர்கள் வைக்க வேண்டாம் என்று ரசிகர்களுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர். நேற்று நடைபெற்ற காப்பான் திரைப்பட விழாவில் சூர்யா இந்த கோரிக்கையை வைத்தார். இதை அனைவரும் வரவேற்றுள்ள நிலையில், இதே பட விழாவில் அவர் கோட்சே மற்றும் பெரியாரை மேற்கோள் காட்டி பேசிய கருத்து சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. நடிகர்கள் வைக்கும் கருத்துக்களை ஒரு தரப்பினர் பாராட்டும், அதே வேளையில், சுய லாபத்திற்காக, பட விளம்பரத்திற்காக அவர்கள் இப்படி பேசுகிறார்கள் என மற்றொரு தரப்பினர் விமர்சனங்களை முன்வைக்க தவறியதில்லை.
எது எப்படி இருந்தாலும் சரி, நடிகர்களோ, தலைவர்களோ, அவர்களது கருத்துகள் சரியாக இருந்தால், அது மக்கள் மத்தியில் பெரிதும் வரவேற்கப்படும் என்பதில் ஐயமில்லை.
Next Story