முள்ளும் மலரும், உதிரிப்பூக்கள், ஜாநி, நெஞ்சத்தை கிள்ளாதே உள்ளிட்ட பல படங்களை இயக்கியவர் இயக்குநர் மகேந்திரன். தமிழ் சினிமா இயக்குநர்களில் ஆளுமை மிக்க ஒருவர். இவர் இயக்கிய நெஞ்சத்தை கிள்ளாதே திரைப்படம் 3 தேசிய விருதுகளை பெற்றது. உதிரிப்பூக்கள், முள்ளும் மலரும், மெட்டி உள்ளிட்ட திரைப்படங்கள் திரைத்துறையின் மிகச்சிறந்த படைப்புகளாக இன்றளவும் பேசப்படுகிறது.
சமீபத்தில், தெறி, நிமிர், பேட்ட ஆகிய படங்களில் நடிகராகவும் தன்னை நிரூபித்திருந்தார். சிறுநீரக கோளாறு காரணமாக, கடந்த சில தினங்களாக அவதிப்பட்டு வந்த அவர், சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். இந்நிலையில், சிகிச்சை பலனின்றி இன்று காலை 6 மணி அளவில் இயக்குநர் மகேந்திரன் காலமானார். அவரது உடல், சென்னை பள்ளிக்கரணையில் உள்ள அவரது வீட்டில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. மகேந்திரனின் இறுதிச் சடங்குகள், இன்று மாலை நான்கு மணியளவில் சென்னை மந்தைவெளி மயானத்தில் நடைபெற உள்ளதாக அவரது மகன் ஜான் தெரிவித்துள்ளார்.
மகேந்திரன் உடலுக்கு ரஜினிகாந்த் மரியாதை
மறைந்த இயக்குநர் மகேந்திரன் உடலுக்கு நடிகர் ரஜினிகாந்த், மலர் வளையம் வைத்து இறுதி அஞ்சலி செலுத்தினார். இதுபோல, இசையமைப்பாளர் இளையராஜா, இயக்குநர்கள் பாரதிராஜா, பாக்யராஜ் ஆகியோரும் மறைந்த மகேந்திரன் உடலுக்கு இறுதி மரியாதை செலுத்தினார்கள். மகேந்திரன் உடலை பார்த்து, இயக்குநர் பாரதிராஜா கண்ணீர் விட்டு அழுதது அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தியது.