எப்படி இருக்கிறது 2.0 ?

ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகியுள்ள 2.0 படம் உலகம் முழுவதிலும் இன்று வெளியாகியுள்ளது.
எப்படி இருக்கிறது 2.0 ?
x
இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், அக்‌ஷய் குமார், எமி ஜாக்சன் ஆகியோர் நடிப்பில், 3டி தொழில்நுட்பம் மற்றும் 4டி சவுண்ட் வசதிகளுடன் உருவாகியுள்ள படம் 2.0. இப்படத்தை லைகா நிறுவனம் தயாரித்துள்ளது. ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார்.

செல்போன் பயன்பாட்டால் ஏற்படும் கதிர்வீச்சு காரணமாக பறவைகள் இனம் நமக்குத் தெரியாமலேயே அழிந்து வருகிறது. அந்த செல்போன்களை எந்த அளவுகோலுடன் பயன்படுத்த வேண்டும் என்பதே படத்தின் கரு. 



பொதுமக்கள் பயன்படுத்தும் செல்போன்கள் அனைத்தும் திடீரென பறந்து காணாமல் போய்விடுகிறது.  ஒரு செல்போன் கடை முதலாளி மற்றும் செல்போன் நெட்வொர்க் முதலாளியும் மர்மமான முறையில் கொல்லப்படுகிறார்கள். பெரிய பிரச்சனை வெடிக்கிறது. என்ன தீர்வு என்று தெரியாமல் விஞ்ஞானிகளை கொண்டு ஒரு ஆலோசனைக் கூட்டம் நடத்துகிறார் உள்துறை அமைச்சர்.  டாக்டர் வசீகரன் அந்த தீய சக்தி என்ன என்று ஆராய்ந்து அதை அழிக்கக்கூடிய ஒரே சக்தி சிட்டி ரோபோ தான் என்று உள்துறை அமைச்சரிடம் கூறுகிறார். ஆனால் சிட்டி வெளியே வந்தால் இன்னும் நாச விளைவுகள் தான் நடக்குமென்று முதல் பாகத்தில் வில்லனாக வந்த போரா உடைய மகன் சூழ்ச்சி செய்கிறார்.



முதலில் ராணுவத்தை வரவழைத்து அந்த சக்தியை அழிக்க முயற்சிக்கிறார்கள். ஆனால் ராணுவத்தாலும் ஒன்றும் செய்ய முடியவில்லை. உடனே உள்துறை அமைச்சர் டாக்டர் வசீகரன் உதவியை நாடி சிட்டி ரோபோவை களத்தில் கொண்டு வருகிறார். சிட்டி ரோபோ-விற்கும் அந்தத் தீய சக்திக்கும் நடக்கும் போராட்டத்தில் யார் வென்றார்கள் ? என்பதே ஷங்கர் இயக்கத்தில் பிரம்மாண்டமாக உருவாகியுள்ள அதிரடி சண்டைக்காட்சிகள் நிறைந்த சயின்ஸ் பிக்க்ஷன் படம்.

பொதுவாக நடிகர் ரஜினிகாந்த் வில்லன் கதாபாத்திரத்தில் சிறப்பாக நடிக்கக் கூடியவர். அவருக்கு ஈடு கொடுக்கும் வில்லனாக பிரமாதமாக நடித்துள்ளார் நடிகர் அக்ஷய்குமார். படத்தில் பறவைகள் ஆராய்ச்சியாளராக வரும் அவர், 
மூன்று வெவ்வேறு தொற்றங்களில் கலக்குகிறார். அவரது கடின உழைப்பு பெரும் அளவில் பேசப்படும்.



பிரமாண்டத்திற்கு பேர் போன இயக்குனர் ஷங்கர் ஹாலிவுட் தரத்திற்கு தமிழ் சினிமாவை இந்த படம் மூலம் உயர்த்தியுள்ளார். எந்திரன் படத்தைவிட இந்த படத்தில் கிராபிக்ஸ் காட்சிகள் தத்ரூபமாக வந்துள்ளது. படத்தை இரண்டு மணி நேரம் நிறைய ஆச்சரியங்களுடன் விறுவிறுப்பாக கொண்டு சென்றுள்ளார்.
சிட்டி ரோபோட்டை காதலிக்கும் மற்றொரு ரோபோவாக வரும் ஏமி ஜாக்சன் ஒரு அழகான பொம்மை போலவே இருக்கிறார்.

ஏ ஆர் ரகுமான் - ஷங்கர் கூட்டணி என்றாலே பாடல்கள் பிரமாதமாக இருக்கும் என்பது அறிந்த ஒன்றுதான். இந்திர லோகத்து சுந்தரி, ராஜாளி, புள்ளினங்காள் பாடல்கள் அனைத்தும் மனதில் நிற்கின்றது. குறிப்பாக பறவைகளை மையப்படுத்தி வரும் புள்ளினங்காள் பாடல் காட்சிகள் மெய்சிலிர்க்க வைக்கிறது.



ரசூல் பூக்குட்டி பங்களிப்பு இந்த படத்திற்கு மிகப்பெரிய பலம். பறவைகளின் சத்தங்கள், செல்போன் மூலம் வரும் சத்தங்கள் என தனித்தனியாக நாம் உணரும் அளவிற்கு நேர்த்தியாக உள்ளது.

நடிகர் ரஜினிகாந்த் இந்த படத்தில் வசீகரன் கதாபாத்திரத்தை விட சிட்டி கதாபாத்திரத்தில் அசத்தியுள்ளார். இந்த அளவுக்கு ஸ்டைலாக நகைச்சுவை கலந்து பேச முடியும் என்றால் அது நடிகர் ரஜினிகாந்த் ஒருவரால் மட்டும் தான் செய்ய முடியும் என்பதற்கு இந்த படம் சான்று. படத்தின் சர்ப்ரைஸ் கிளைமாக்ஸில் வரும் அந்த வித்தியாசமான ரஜினிகாந்த் தான். தியேட்டரில் விசில் சத்தம் பறக்கிறது. படத்தின் முதல் பாதியிலும் சரி இரண்டாம் பாதியிலும் நிறைய சண்டைக்காட்சிகள் உள்ளது. குழந்தைகளுக்குப் பிடிக்கும் வகையில் அமைந்துள்ளது. 



3டி தொழில்நுட்பத்தில் இனி படங்களை இயக்கப்போகும் இயக்குனர்களுக்கு இயக்குனர் ஷங்கர் ஒரு முன்னுதாரணமாக திகழ்வார். ரஜினிகாந்தின் இந்த 2.0 சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை ரசிக்க கூடிய, சிந்திக்க வைக்கும் படம்.

Next Story

மேலும் செய்திகள்