தொடர்ந்து சர்ச்சையில் சிக்கும் முருகதாஸ் : கஜினி முதல் சர்கார் வரை..
இந்திய அளவில் முன்னணி இயக்குனர்களில் ஒருவரான ஏ.ஆர். முருகதாஸ் தனது திரைப்படக் கதை தொடர்பாக சர்ச்சைகளில் சிக்குவது இது முதல் முறை அல்ல.
தீனா படம் மூலம் தமிழக திரையுலகில் அறிமுகமானவர் இயக்குனர் முருகதாஸ்.. பின் ரமணா மூலம் ஒட்டுமொத்த திரையுலகையும் திரும்பி பார்க்க வைத்தார்
புக்ழ் சேர சேர இயக்குனர் முருகதாஸ் சர்ச்சையிலும் சிக்கினார். கடந்த 2005ஆம் ஆண்டு அவரது இயக்கத்தில் வெளியான கஜினி, சூரியாவுக்கு திருப்புமுனை படமாக அமைந்தது. ஆனால் அந்தப்படம் ஹாலிவுட்டில் வெளிவந்த MOMENTO திரைப்படத்தின் தழுவல் என்று சர்ச்சையும் எழுந்தது. தம்மிடம் இயக்குனர் முருகதாஸ் அனுமதிபெறவில்லை என்று அந்தப் படத்தின் இயக்குனர் கிறிஸ்டோபர் நோலன் கூறியிருந்ததாக அனில் கபூர் ஒரு பேட்டியில் தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில் கடந்த 2012 ஆம் ஆண்டு விஜய்க்கு திருப்புமுனையை ஏற்படுத்திய துப்பாக்கி திரைப்படத்தில் சில காட்சிகள் TAKEN என்ற FRENCH திரைப்படத்திலிருந்து எடுக்கப்பட்டதாக புகார்கள் எழுந்தது.
ஆனால், பெரும் சர்ச்சையில் சிக்கியது, 2014ஆம் ஆண்டு வெளியான கத்தி திரைப்படம் தான். விவசாயிகளின் பிரச்சனை மற்றும் கம்யூனிச கொள்கைகளை பேசிய அந்த திரைப்படத்தின் கதை, தன்னுடையது என்று கோபி நயினார் என்பவர் நீதிமன்றத்தில் முறையிட்டார். ஆனால் வழக்கில் கோபி நயினார் தோற்றாலும், பின்னர் அறம் என்ற திரைப்படத்தின் மூலம் அவர் வெற்றி பெற்றார். மேலும் கத்தி திரைப்படத்தில் உள்ள பிரபல காட்சிகளும், வெளிநாட்டு சினிமா காட்சிகளிலிருந்து எடுக்கப்பட்டதாக தெரியவந்தது.
இதே போன்று 2017ஆம் ஆண்டு மகேஷ் பாபு நடித்து வெளியான ஸ்பைடர் திரைப்படமும், கிறிஸ்டோபர் நோலன் இயக்கத்தில் வெளியான DARK KNIGHT திரைப்படத்தின் தழுவல் என்ற சர்ச்சையும் எழுந்தது.
தற்போது விஜய் நடித்து தீபாவளிக்கு வெளியாக உள்ள சர்காரும், கதை சர்ச்சையில் சிக்கியது. செங்கோல் படத்தின் கதை கருவும், சர்கார் படத்தின் கதை கருவும் ஒன்று தான் என்று தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர் சங்கத்தின் தலைவர் பாக்கியராஜ் கூறினார். இந்த நிலையில், நீதிமன்றம் மூலம் வருண் ராஜேந்திரனும், இயக்குனர் முருகதாசும் சமரசம் செய்து கொண்டனர்.
Next Story