விஸ்வரூபம் 1 கதை - ஒரு ரீவைண்ட்

விஸ்வரூபம் 2 பார்க்கும் முன் இதை படித்துக்கொள்ளுங்கள்!
விஸ்வரூபம் 1 கதை - ஒரு ரீவைண்ட்
x
அமெரிக்காவில் தொடங்கும் விஸ்வரூபம் முதல் பாகத்தில் , தன் கணவனை பற்றி நிருபமா (பூஜா குமார்), ஒரு மனோதத்துவ நிபுணரிடம் சொல்லி கொண்டிருப்பார். கணவர் விஸ்வநாத் என்கிற விஸ்( கமல்)  மீது பெரிய ஈர்ப்பொன்றும் இல்லை என்றும், தன்னுடைய ஆராய்ச்சியை தொடர அனுமதிக்கும் கணவன் தேவை என்ற விதத்தில்தான் திருமணம் செய்து கொண்டதாகவும் தெரிவிக்கிறார். இந்நிலையில் , அலுவலகத்தில் தன்னுடைய பாஸ் தீபக் என்பவர் மீது ஈர்ப்பு ஏற்பட்டுவிட, ஒருவேளை விஸ்வநாத்திடம் குறை ஏதும் இருந்தால் அதை காரணம் காட்டி பிரிந்துவிடலாம் என்பதற்காக ஒரு உளவாளியை கொண்டு கணவனை பற்றி அறிய முயற்சிக்கிறார். அப்போதுதான், தனது கணவர் ஒரு முஸ்லிமா என்ற சந்தேகம் வருகிறது. அந்த உளவாளி தங்களை தான் பின் தொடர்கிறான் என நினைத்து தீவிரவாதிகள் அவரை கொன்றுவிட, அவரிடம் இருக்கும் டைரியிலிருந்து நிருபமா பற்றி தெரிந்துகொள்கின்றனர். எனவே, நிருபமாவையும், அவரது கணவர் விஸ்வநாத்தையும் தீவிரவாதிகள் தங்கள் கஸ்டடியில் கொண்டு வருகின்றனர். அப்போதுதான், தீபக்கிற்கும் தீவிரவாதிகளுக்கும் தொடர்பிருப்பது நிருபமாவிற்கு தெரிய வருகிறது. அது மட்டுமல்ல, இந்த காட்சி வரை அப்பாவியாய் இருக்கும் விஸ்வநாத் தனது இன்னொரு முகத்தை காட்டி நிருபமாவை மிரள வைக்கிறார்.  



உடனே ஃபிளாஷ்பாக். அதில் விஸ்வநாத்தின் பெயர் விஷாம் அகமது கஷ்மீரி. அல் கொய்தா தீவிரவாதிகளுடன் இணைகிறார். அந்த தீவிரவாதிகளுக்கு பயிற்சியும் அளிக்கிறார். அப்போது ஒமர் என்கிற 2ம் கட்ட தலைவர் இவரிடம் மிகவும் நட்பாக பழக ஆரம்பித்து, அமெரிக்க போர் கைதிகள் உயிருடன் தான் இருக்கிறார்கள் உள்ளிட்ட பல ரகசியங்களை சொல்கிறார். மேலும், ஒரு உயரமான விருந்தாளி(ஒசாமா பின்லேடன்)  என கூறப்படும் தலைவரையும் அங்கே பார்க்கிறார் விஷாம். அந்த நேரத்தில் அமெரிக்க படைகள் தாக்குதல் நடத்துகின்றன. தங்களுக்குள் ஒரு உளவாளி இருப்பதை உணர்ந்துகொள்ளும் ஒமர் ஒரு அப்பாவியை தண்டிக்கிறார். ஆனால் உண்மையில் அந்த உளவாளி விஷாம் தான். அவர் இந்திய உளவுத்துறையை சேர்ந்தவர்.



மீண்டும் நிகழ்காலத்திற்கு வரும்போது, சீசியம் என்கிற வெடிபொருளை புறாவின் கால்களில் கட்டி ஒரே சமயத்தில் அமெரிக்காவின் பல இடங்களில் குண்டு வெடிப்புகளை நிகழ்த்த ஒமர் திட்டமிருப்பதை விஷாம் அறிந்து கொள்கிறார். அந்த திட்டத்தை தனது நண்பர்கள் மற்றும் மனைவியின் உதவியுடன் முறியடிக்கிறார். ஆனால், ஒமர் மற்றும் சலீம் இருவரும் விமானத்தில் தப்பி செல்கின்றனர். அப்போது, கதை இத்துடன் முடிய போவதில்லை, ஒமரை தேடி செல்ல போகிறேன் என்று விஷாம் சொல்ல அதோடு திரைப்படம் நிறைவடைகிறது.



இனி 2ம் பாகத்தில், விஷாம் எப்படி தீவிரவாதிகளுடன் இணைந்தார்? அவருக்கென்று குடும்பம் இருக்கிறதா?  ஆண்ட்ரியாவுடன் எப்படி பழக்கம் ஏற்பட்டது? உள்ளிட்ட கேள்விகளுக்கான பதில்கள் முன்கதைகளாகவும், ஒமர் மற்றும் சலீமை எப்படி கண்டு பிடிக்கிறார் என்பது தொடர்ச்சியாகவும் இருக்கும்.

Next Story

மேலும் செய்திகள்