கடைக்குட்டி சிங்கம் எப்படி இருக்கு?
நடிகர் கார்த்திக் நடிப்பில், அவரது அண்ணன் சூர்யா தயாரித்து வெளிவந்த கடைக்குட்டி சிங்கம் முழுக்க முழுக்க விவசாயிகளின் பெருமையை கூறுவதும் குடும்ப உறவுகளை எப்படி பேணி காக்க வேண்டும் என்பதை உணர்த்தும் படமாக அமைந்துள்ளது.
படத்தின் கதை என்ன?
என்னதான் பெண் குழந்தைகள் பிறந்தாலும் ஒரு ஆண் வாரிசு நமக்கு வராதா என்ற ஏக்கத்தில் இருக்கும் விவசாயி நடிகர் சத்யராஜ். அவருக்கு கடைக்குட்டி சிங்கம் ஆக கார்த்திக் பிறக்கிறார். பத்தாங்கிளாஸ் வரைக்கும் படித்த கார்த்திக் அந்த கிராமத்தில் சிறந்த விவசாயியாக திகழ்கிறார். கதைப்படி கார்த்திக்கு ஐந்து அக்காள்கள் நான்கு மாமாக்கள். ஒரு மாமா இறந்து விட்டார். அவருக்கு கல்யாண வயதில் இரண்டு முறைப்பெண்கள் - நடிகை பிரியா பவானி சங்கர் மற்றும் செம படம் மூலம் அறிமுகமான நடிகை ஆராதனா. இவர்களில் யாரோ ஒருவரை தான் கார்த்திக் கல்யாணம் செய்வார் என்று நினைக்க, கார்த்திக்கோ கல்லூரியில் படிக்கும் நடிகை சாயிஷா மேல் காதல் வசப்படுகிறார். காதலை வீட்டில் சொன்னதும், குடும்பத்தில் ஒருவர் முடியாது என்றால் கூட இந்த கல்யாணம் நடக்காது என்று சத்யராஜ் கண்டிஷன் போட, ஏகப்பட்ட குழப்பங்கள் ஏற்படுகிறது.
கார்த்தி காதலித்த பெண்ணை கை பிடிப்பாரா இல்லை முறை பெண்ணை கல்யாணம் செய்வாரா? என்பதுதான் கதை. இந்தக் கதையை இயக்குனர் பாண்டியராஜ் மிக நேர்த்தியாக கையாண்டிருக்கிறார். மூத்த அக்காள் மகனாக வரும் சூரி படம் முழுவதும் கார்த்திக் உடன் பயணம் செய்கிறார். காமெடி சரவெடி. செண்டிமெண்ட் காட்சிகளிலும் பின்னி பெடலெடுத்திருக்கிறார் சூரி. ஒளிப்பதிவாளர் வேல்ரஜின் பணி சிறப்பு. இசையமைப்பாளர் இமானின் நூறாவது படம் இது. சண்டைக்காரி, வா ஜிக்கி பாடல்கள் முனுமுனுக்க வைக்கின்றன. சண்டைக் காட்சிகளை விறுவிறுப்பாக அமைத்துள்ளார் திலீப் சுப்பராயன். படத்தில் வசனங்கள் மூலம் விவசாயத்தின் அருமை பெருமைகளை அழுத்தம் திருத்தமாக சொல்லி இருக்கிறார் இயக்குனர் பாண்டிராஜ். அந்த வசனங்களை கார்த்திக் பேசும் போது தியேட்டரில் விசில் பறக்கிறது. மொத்தத்தில் குடும்பத்துடன் எந்தவித முக சுளிப்பும் இல்லாமல் பார்க்க கூடிய ஒரு பொழுதுபோக்கு படம் கடைக்குட்டி சிங்கம்.
Next Story