பிறந்த நாளன்று அரசியல் அறிவிப்பா - அதிரடி காட்டும் விஜய் ரசிகர்கள்... ?

கதாநாயகன்... பின்னணிப் பாடகர்... சிறப்பாக நடனம் ஆடுபவர் என்று பல திறமைகளை ஒருங்கே பெற்றவர், இளைய தளபதி என்று ரசிகர்களால் அன்புடன் அழைக்கப்படும் நடிகர் விஜய்.
பிறந்த நாளன்று அரசியல் அறிவிப்பா - அதிரடி காட்டும் விஜய் ரசிகர்கள்... ?
x
தமிழ் சினிமாவின் வசூல் சக்கரவர்த்தி. பாக்ஸ் ஆபிஸ் வெற்றியைப் பிடிப்பதில் கில்லி. அவர் தான் இளைய தளபதி விஜய். சினிமா பின்னணியில் இருந்து வந்த பெரும்பாலான நடிகர்கள் தோல்வியையே சந்தித்திருக்கின்றனர். ஆனால், விதிவிலக்காக, சிலர் மட்டுமே, இன்றும் வெற்றிக்கொடிகட்டிப் பறந்துகொண்டிருக்கிறார்கள். அந்தப்பட்டியலில் முதலிடம் பிடித்திருப்பவர் விஜய்.

பிரபல இயக்குனர் எஸ்.ஏ.சந்திரசேகர்- பின்னணிப் பாடகி ஷோபா தம்பதியினரின், மகனான விஜய், விசுவல் கம்யூனிகேஷன் எனப்படும் காட்சித் தகவலியல் படித்தவர். ஆரம்பகாலகட்டங்களில், தன் தந்தையின் திரைப்படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்திருக்கிறார்.

பின்னர், நாளைய தீர்ப்பு திரைப்படத்தின் மூலம், ஹீரோவாக, அறிமுகமானார். பூவே உனக்காக, லவ் டுடே, ஒன்ஸ்மோர், காதலுக்கு மரியாதை, துள்ளாத மனமும் துள்ளும், குஷி ஆகிய திரைப்படங்கள் விஜய்க்கு காதல்நாயகன் என்ற அந்தஸ்தை பெற்றுத்தந்தது.
அதன்பின்னர், பகவதி, கில்லி, திருப்பாச்சி,சிவகாசி ஆகிய திரைப்படங்கள் மூலம், அதிரடி ஆக்‌ஷன் ஹீரோவாகவும் அவதாரம் எடுத்தார்.

நடிகர் மட்டுமில்லாமல் பின்னணிப் பாடகராகவும் அறியப்படும், விஜய் தன் படங்கள் மட்டுமில்லாமல், பிற கதாநாயகர்களது திரைப்படங்களுக்கும் பாடல்கள் பாடியிருக்கிறார். இசையமைப்பாளர்களில் கிட்டத்தட்ட 14 பேர் இசையில் இவர் பாடிய பாடல்கள் எல்லாமே ஹிட் ஆனவைதான். காதலுக்கு மரியாதை படத்திற்காக தமிழக அரசின் சிறந்த நடிகர் விருதைப் பெற்றிருக்கிறார் விஜய். இதேபோல் தமிழக அரசின் எம்.ஜி.ஆர்.விருது, திருப்பாச்சி படத்திற்காக சிறந்த நடிகர் விருது உள்ளிட்ட மேலும் பல விருதுகளும் கிடைத்திருக்கிறது.

பொதுவாக எல்லோரையும் "வாங்கண்ணா" என்று அன்புடன் அழைக்கும் பழக்கம் கொண்டவர். நிகழ்ச்சிகளில் எங்கேனும்பேசும்போது கூட, என் நெஞ்சில் குடியிருக்கும் ரசிகர்களே... என்று, தன் ரசிகர்களுக்கு முக்கியத்துவம் கொடுப்பார். இதுவே அவரது பாணி.

தமிழ் சினிமாவுக்கு பேரரசு, எழில், செல்வா, பரதன், மாதேஷ் உள்பட 22 இயக்குனர்களுக்கு வாய்ப்பளித்து அறிமுகம் செய்துவைத்த பெருமையும் இவருக்கு உண்டு. கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு, வெளியான விஜயின் தலைவா, கத்தி ஆகிய திரைப்படங்கள் அரசியல் நெருக்கடிக்குள்ளாகவும் தவறவில்லை. ஆனால், இவற்றையெல்லாம் பொருட்படுத்தாமல், தொடர்ந்து துணிச்சலாக பல கதைகளைத் தேர்வு செய்து நடித்துவருகிறார். இதேபோல், புலி, தெறி, பைரவா ஆகிய படங்களை தொடர்ந்து வெளியான மெர்சல் திரைப்படம் ஜி.எஸ்.டி. குறித்து விமர்சித்ததால், கடும் எதிர்ப்புகளை சம்பாதித்தது.

தன் பிறந்தநாளை எப்போதும் ஆடம்பரமாக கொண்டாடுவதில் விருப்பமில்லாதவர் விஜய். தனது பிறந்தநாளை பிறருக்கு உதவும் நாளாக கொண்டாடுங்கள் என்று ரசிகர்களுக்கு அறிவுறுத்துவார். அதன்படியே, இன்றைக்கும், விஜய் பிறந்த நாளில், அவரது ரசிகர் மன்றங்கள் சார்பில், ஏழை எளியவர்களுக்கு நலத்திட்ட உதவிகள் செய்வதை விஜய் ரசிகர்கள் வழக்கமாகக் கொண்டுள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்