'அடிமைப் பெண்' மூலம் தமிழில் அறிமுகம் - எஸ்.பி.பி

பின்னணி பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியத்தின் பிறந்த நாளான இன்று அவரது திரைப்பயணத்தின் சில துளிகளை திரும்பி பார்க்கலாம்
அடிமைப் பெண் மூலம் தமிழில் அறிமுகம் - எஸ்.பி.பி
x
நெல்லூர் அருகே உள்ள சிம்மபுரியில் பிறந்த எஸ்.பி. பாலசுப்பிர மணியம், முதன் முதலில் பின்னணி பாடகராக அறிமுகமானது, 'Sri Sri Sri Maryada Ramanna' என்ற தெலுங்கு படத்தில். 1969ல் வெளியான அடிமைப் பெண்' படத்தில் எம்.ஜி.ஆருக்கு பின்னணி குரல் கொடுத்ததன் மூலம், தமிழில் அமர்க்களமாக அறிமுகமானார், எஸ்.பி.பி.

ஏராளமான படங்களில் எம்.ஜி.ஆருக்கும் ஜெமினி கணேசனுக்கும் பின்னணி பாடிய எஸ்.பி.பி.யின் குரல், அடுத்த தலைமுறை நடிகர்களான ரஜினி, கமல் தொடங்கி விஜயகாந்த், ராமராஜன், மோகன், கார்த்திக், சரத்குமார், பிரபு, சத்யராஜ், விஜய், அஜித் என அனைவருக்காகவும் ஒலித்துள்ளது. 

இளையராஜாவின் இசையும், எஸ்.பி.பி. குரலும் இணைந்து ஒலிக்கும் பாடல்களை. வண்ண நிலவோடு இணைந்த குளிர் தென்றலாகவே ரசிகர்கள் கொண்டாடுகின்றனர்.  தாய் மொழி தெலுங்காக இருந்தாலும், எஸ்.பி.பி.யின் தமிழ் உச்சரிப்பு அட்சர சுத்தமாக இருப்பது கூடுதல் சிறப்பு.

16 மொழிகளில் 40 ஆயிரம் பாடல்களுக்கு மேல் பாடியுள்ள எஸ்.பி.பி.யை பாடும் நிலா பாலு என்றே ரசிகர்கள் அழைக்கின்றனர். 

பாடலை கடந்து இசை, நடிப்பு என்றும் பரிமாணங்களை காட்டியவர். ரஜினியின் 'துடிக்கும் கரங்கள்' படத்துக்கு இசை எஸ்.பி.பி.தான்.

கேளடி கண்மணி, கமலின் குணா, அவ்வை சண்முகி, அஜித்தின் உல்லாசம், விஜயின் பிரியமானவளே,  நாகார்ஜூனாவின் ரட்சகன், பிரபுதேவாவின் காதலன் என ஏராளமான படங்களில் நடித்துள்ள எஸ்.பி.பி., நடிப்பிலும் ஒரு 'சிகரம்' என்றே சொல்லலாம்.

50 ஆண்டுகளுக்கு மேலான திரைப்பயணத்தில் பாடல்களுக்காக பலமுறை தேசிய விருதுகளையும் பத்ம ஸ்ரீ உள்ளிட்ட விருதுகளையும் பெற்றிருக்கும் எஸ்.பி.பி., தற்போதும் மேடை கச்சேரிகள் மூலமாக ரசிகர்களை மகிழ்வித்து வருகிறார்.


Next Story

மேலும் செய்திகள்