காரியாபட்டி அருகே தனியார் சோலார் உயர் கோபுர மின்கம்பத்தில் ஏறி தற்கொலை மிரட்டல் விடுத்த பெண்ணால் பரபரப்பு
காரியாபட்டி அருகே தனியார் சோலார் உயர் கோபுர மின்கம்பத்தில் ஏறி தற்கொலை மிரட்டல் விடுத்த பெண்ணால் பரபரப்பு
ஒரு மணி நேர போராட்டத்திற்குப் பிறகு கயிறு கட்டி கீழே இறக்கிய தீயணைப்புத் துறையினர்
காரியாபட்டி அருகே D.கடமங்குளம் கிராமத்தில் தனியார் சோலார் நிறுவனம் செயல்பட்டு வருகிறது.
இங்கிருந்து மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டு பல்வேறு இடங்களுக்கு கொண்டு செல்லப்படுகிறது.
இதற்காக நிலையூர் -கம்பிகுடி கால்வாய் கரை மீதும், பட்டா நிலங்கள் முன்பாக மின் கம்பங்கள் நட்டு மின்சாரம் கொண்டு செல்லப்பட்டு வருவதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் தற்போது கூடுதலாக ஆவியூர் துணை மின் நிலையத்திற்கு சோலார் நிறுவனத்திலிருந்து மின்சாரம் கொண்டு செல்வதற்காக மீனாட்சிபுரம் கிழக்கு புறம் பகுதியில் உயர் கோபுரம் அமைக்கப்பட்டு குடியிருப்பு பகுதி வழியாக மின்சாரம் கொண்டு செல்ல மின் கம்பங்கள் நட்டு வைக்கப்பட்டுள்ளது.
குடியிருப்பு பகுதியில் உயர் அழுத்த மின்சார வயர் செல்வதினால் பெரும் பாதிப்பு ஏற்பட வாய்ப்புள்ளது என கூறி அப்பகுதி பொதுமக்கள் மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் எதிர்ப்பு தெரிவித்து ஏற்கனவே கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்த நிலையில் தனியார் சோலார் நிறுவனம் தேசிய நெடுஞ்சாலை துறையிடம் அனுமதி பெற்று குடியிருப்பு பகுதிகளில் மின்சாரம் கொண்டு செல்வதற்காக பணிகளை துவங்கி வந்தனர். இந்த நிலையில் இன்று ஆத்திரமடைந்த மாதர் சம்மேளனம் தலைவர் பஞ்சவர்ணம் என்பவர் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் கொடியினை கையில் பிடித்தவாறு சோலார் நிறுவனம் சார்பில் நிறுவப்பட்டுள்ள உயர் கோபுர மின் கம்பத்தின் மீது ஏறி குடியிருப்பு பகுதிகளில் உயர் மின்னழுத்த வயர்களை கொண்டு செல்லக்கூடாது என சோலார் நிறுவனத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தும், பொதுமக்களுக்கு இடையூறு செய்யாத வகையில் ஊர் மக்கள் வசிக்காத, குடியிருப்பு இல்லாத பகுதி மேற்குப் பக்கம் டவர் அமைத்து மின்சார வயர்களை கொண்டு செல்ல வலியுறுத்தி தற்கொலை மிரட்டல் விட்டார்.
உடனே தகவல் அறிந்து காரியாபட்டி காவல் ஆய்வாளர் விஜய காண்டீபன் மற்றும் தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் த்துறை வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து உயர் கோபுர மின்கம்பத்தில் ஏறி தற்கொலை முயற்சி செய்ய இயன்ற பஞ்சவர்ணத்திடம் பேச்சு வார்த்தை நடத்தினர்.
பேச்சுவார்த்தையின் அடிப்படையில் சுமார் ஒரு மணி நேரம் போராட்டத்திற்குப் பிறகு தற்கொலை முயற்சி செய்ய முயன்ற பஞ்சவர்ணத்தை காரியாபட்டி தீயணைப்பு மற்றும் மீட்பு பணி வீரர்கள் கயிறு கட்டி கீழே இறக்கி கொண்டு வந்தனர்.
மின்சாரம் வயர் செல்வதற்காக கட்டப்பட்ட உயர் கோபுர மின்கம்பத்தில் பெண் ஒருவர் ஏறி தற்கொலை செய்ய முயன்ற சம்பவம் இப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.