காவல் இருந்தவரை தும்பிக்கையால் தூக்கி அடித்து கொன்ற யானை.. அதிகாலையிலே அதிபயங்கரம்

x

சத்தியமங்கலம் புலிகள் காப்பக வனப்பகுதியில் ஏராளமான காட்டு யானைகள் நடமாடுகின்றன. இரவு நேரத்தில் வனப்பகுதியை விட்டு வெளியேறும் காட்டு யானைகள் அருகாமையில் உள்ள கிராமங்களில் புகுந்து விவசாய தோட்டங்களில் உள்ள பயிர்களை சேதப்படுத்துவது தொடர் கதையாக உள்ளது. இதற்கிடையே தாளவாடி மலைப்பகுதியில் உள்ள முதியனூர் கிராமத்தைச் சேர்ந்த விவசாயி ராமு என்பவர் தனது விளை நிலத்தில் பயிரிடப்பட்டிருந்த ராகி பயிரை அறுவடை செய்து நிலத்தில் காய வைக்கும் பணியில் ஈடுபட்டிருந்தார். இரவு நேரத்தில் காட்டு யானைகள் ராகி பயிரை சேதப்படுத்துவதால் தினமும் இரவு ராமு காவலுக்கு செல்வது வழக்கம். நேற்று இரவு வழக்கம் போல் காவலுக்கு சென்ற ராமு இன்று அதிகாலை காட்டு யானை விளைநிலத்தில் நடமாடுவதை கண்டு விரட்ட முயன்றுள்ளார். அப்போது யானை ராமுவை துரத்த தொடங்கியது. யானையிடம் இருந்து தப்பிப்பதற்காக ராமு அங்கும் இங்கும் ஓடியபோதும் காட்டு யானை துரத்தி தும்பிக்கையால் பிடித்து கீழே போட்டு மிதித்ததில் சம்பவ இடத்திலேயே ராமு உயிரிழந்தார். அக்கம் பக்கம் இருந்தவர்கள் உடனடியாக காட்டு யானையை விரட்டி அடித்தனர். இது குறித்து ஆசனூர் காவல்துறையினருக்கும் தாளவாடி வனத்துறையினருக்கும் தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் மற்றும் வனத்துறையினர் சம்பவம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். காட்டு யானை தாக்கி விவசாயி பலியான சம்பவம் தாளவாடி மலைப் பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது


Next Story

மேலும் செய்திகள்