"என் உயிருக்கு ஆபத்து; சிறையிலேயே கொல்லப்படுவேன்.." மாவுக்கட்டு கையோடு கதறிய சவுக்கு சங்கர்
சவுக்கு சங்கரை ஒரு நாள் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க நீதிமன்றம் அனுமதி அளித்துள்ள நிலையில், நாளை மாலை 5 மணி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த உத்தரவிட்டுள்ளது.
பெண் காவல் துறையினரையும், காவல்துறை உயர் அதிகாரிகளையும் அவதூறாக பேசியதாக யூ டியூபர் சவுக்கு சங்கர் கைது செய்யப்பட்டு, கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். சிறையில் காவலர்கள் தாக்கியதில் அவரது எலும்பு முறிவு ஏற்பட்ட நிலையில்,
நீதிமன்ற உத்தரவுபடி சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில்,மத்திய சிறையில் இருந்து சவுக்கு சங்கர் கோவை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக பலத்த பாதுகாப்புடன் அழைத்து வரப்பட்டார். அவருக்கு எக்ஸ்ரே எடுக்கப்பட்ட நிலையில், மீண்டும் மாவு கட்டு போடப்பட்டது. பின்னர் காவல் துறையினர் சவுக்கு சங்கரை பாதுகாப்பாக மீண்டும் சிறைக்கு அழைத்து சென்றனர். அப்போது தன்னை சிறையில் காவலர்கள் தாக்கியதாக சவுக்கு சங்கர் முழக்கமிட்டார்.