கலவரம்.. வெறியாட்டம்.. சொட்ட சொட்ட ரத்தம்.. ஒரு கை அசைந்ததும் அப்படியே தணிந்ததும்..வெளிவராத புதிய தகவல்

x

பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தலைமையில், அக்கட்சியினர் என்எல்சி நிறுவனத்தை முற்றுகையிட முயன்ற சம்பவத்தில் பெரும் கலவரம் வெடித்த நிலையில், போராட்டத்தில் நடந்ததை விரிவாக விவரிக்கிறது இந்த தொகுப்பு...

நெய்வேலி என்எல்சி இந்தியா நிறுவனத்தின் 2-ம் சுரங்க விரிவாக்கப் பணிகளுக்காக கத்தாழை, கரிவெட்டி, சுப்பையா நகர், வலையமாதேவி உள்ளிட்ட பகுதிகளில், பலத்த போலீஸ் பாதுகாப்புடன் என்எல்சி நிறுவனம் நிலத்தை கையகப்படுத்தி வருகிறது.

அறுவடைக்கு தயாராக இருந்த நிலையில், பயிர்களை உரு தெரியாமல் அழித்து, என்எல்சி நிறுவனம் கால்வாய் வெட்டும் பணியை அதிரடியாக ற்கொண்டதால், விவசாயிகள் கொதித்தெழுந்தனர்.

இந்த நிலையில் நிலம் கையகப்படுத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்த பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ், என்எல்சி நிறுவனத்தைக் கண்டித்து, முற்றுகைப் போராட்டம் நடைபெறும் என அறிவித்திருந்தார்.

அன்புமணி ராமதாஸின் இந்த அறிவிப்பை அடுத்து, விழுப்புரம் சரக டிஐஜி ஜியவுல்ஹக் தலைமையில் 2 ஆயிரம் போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.

அதன்படி, முற்றுகைப் போராட்டத்தில் பங்கேற்பதற்காக வந்த அன்புமணி ராமதாஸ், கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களுடன் சேர்ந்து என்எல்சி நுழைவாயில் பகுதியை நோக்கி செல்லும்போது, போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தினர். இதனால் அங்கு தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

அதனைத் தொடர்ந்து, அன்புமணி ராமதாஸ் மற்றும் அவருடன் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட முயன்றவர்களை, போலீஸார் கைது செய்து அழைத்து செல்ல காவல் பேருந்தை எடுத்து வந்தனர். அப்போது அந்த பேருந்தை பாமக தொண்டர்கள் கல்வீசித் தாக்கி முகப்பு கண்ணாடியை உடைத்து சேதப்படுத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.

ஆனாலும், போலீசார் அன்புமணி உள்ளிட்டோரை கைது செய்து பேருந்தில் ஏற்றினர். அப்போது, பாமக தொண்டர்கள், அன்புமணியை விடுதலை செய்ய வேண்டும் என கோஷமிட்டதுடன், பேருந்தை மறித்து தரையில் அமர்ந்ததுடன், பேருந்தின் மீது ஏறியும் ரகளையில் ஈடுபட்டனர்.

அதனைத் தொடர்ந்து, பாமகவினர் கல்வீச்சு சம்பவத்தில் ஈடுபடவே, அப்பகுதியில் பதற்றம் அதிகரித்தது.

நிலைமையை சமாளிக்க காவல் துறையின், வஜ்ரா வாகனம் மூலம் தண்ணீரை பீய்ச்சி அடித்தனர்.

அதற்கு பதிலடியாக, போராட்டக்காரர்கள் தொடர்ந்து காவல்துறை மீதும், காவலர்கள் மீதும் கல்வீசி தாக்குதலில் ஈடுபட்டதால், 20 காவலர்களுக்கு காயம் ஏற்பட்டு, என்எல்சி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

கல்வீச்சில் 3 காவல்துறை வாகனங்கள் சேதமடைந்த நிலையில், கூட்டத்தைக் கலைக்க, காவல்துறையினர் கண்ணீர் புகைக் குண்டு வீசியும், தடியடி நடத்தியும் நடவடிக்கை மேற்கொண்டனர்.

எனினும் பதற்றம் குறையாததால், பேருந்தில் இருந்து இறங்கிய பாமக வழக்கறிஞர் பாலு, மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேசி சமரசம் செய்தார்.

அதனைத் தொடர்ந்து, அன்புமணி உள்ளிட்ட பாமகவை சேர்ந்த 200க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டு, அருகிலிருந்த திருமண மண்டபத்தில் தங்கவைக்கப்பட்டனர்.

அதனைத் தொடர்ந்து, மாலை வேளையில் அன்புமணி ராமதாஸ் மற்றும் கைது செய்யப்பட்ட அனைவரும் விடுவிக்கப்பட்டனர். பின்னர் பேசிய அவர், மக்களின் உரிமைக்காக எந்த வகை போராட்டத்தையும் நடத்த தயார் என்றும், இதற்காக எந்த எல்லைக்கும் செல்ல தயார் என்றும் தெரிவித்தார்.

இதனிடையே, நெய்வேலியில் என்எல்சி நிறுவனத்தை முற்றுகையிட முயன்ற பாமகவினரை தடுத்து நிறுத்தும்போது ஏற்பட்ட கலவரத்தில், காயமடைந்து என்எல்சி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள காவலர்களை, தமிழக டிஜிபி சங்கர் ஜிவால் நேரில் சந்தித்து ஆறுதல் கூறியதுடன், உடல்நலம் குறித்து விசாரித்தார்.

அதனைத் தொடர்ந்து மருத்துவமனை வளாகத்திலேயே கடலூர் ஆட்சியர் அருண்தம்புராஜ், என்எல்சி தலைவர் பிரசன்னகுமார் மோட்டுப்பள்ளி மற்றும் டிஜிபி ஆகியோரிடம் டிஜிபி சங்கர் ஜிவால் ஆலோசனை நடத்தினர்.

ஆலோசனைக்குப் பின் ஐஜி கண்ணன் கூறுகையில், போராட்டத்தின்போது ஏற்பட்ட வன்முறையில், 6 காவலர்கள் உட்பட 20 காவல் அதிகாரிகள் காயமடைந்ததாகவும், 3 வாகனங்கள் சேதப்படுத்தப்பட்டதாகவும் தெரிவித்தார்.

மேலும், சாலை மறியல் போராட்டங்களில் ஈடுபட்டதாக 800 பேர் வரை கைது செய்யப்பட்டதாக தெரிவித்தார்.

ஒட்டுமொத்தமாக போராட்டம் போர்க்களமாக மாறியதால், நெய்வேலி பதற்றம் நிறைந்த பூமியாக மாறியது...


Next Story

மேலும் செய்திகள்