DGP ஆபிஸ் முன் கதறிய போலீஸ் -மெரினா சாலையில் கண்ணீருடன் மன்றாடல் - "2 பேரையும் கருணை கொல பண்ணிடுங்க"

x

மகளுக்கு தவறான சிகிச்சை வழங்கியது தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்காததால், விரக்தி அடைந்த தலைமை காவலர் டிஜிபி அலுவலகம் முன்பு அமர்ந்து, கருணை கொலை செய்யுமாறு போராட்டத்தில் ஈடுபட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதனை விவரிக்கிறது இந்த தொகுப்பு...

சென்னை ஓட்டேரி காவல் நிலையத்தில் தலைமை காவலராக பணிபுரிந்து வருபவர் கோதண்டபாணி... இவர் தனது மகளுக்காக கடந்த 4 மாதங்களாக நடத்தும் பாசப்போராட்டம், இதுவரை சரியான தீர்வை எட்டாததுதான், அவரை மிகுந்த மனவேதனையில் ஆழ்த்தியுள்ளது.

நன்றாக ஓடி, ஆடி விளையாடிய ஆசை மகளுக்கு, 3 வயதில் சிறுநீரக பிரச்சினை ஏற்பட்டுள்ளது.

அதற்காக சென்னை எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனையில், கோதண்டபாணி தொடர்ந்து தனது மகளை அழைத்துச் சென்று சிகிச்சை பெற்று வந்துள்ளார்.

தற்போது அவரின் மகளுக்கு 10 வயது ஆகும் நிலையில், 3 வயதில் இருந்தே, சிறுநீரகப் பிரச்சினைக்காக மருத்துவர்கள் பரிந்துரைத்த மருந்தையே, கோதண்டபாணி அளித்து வந்துள்ளார்.

ஆனால் சிறுமிக்கு அளிக்கப்பட்ட மருந்து எதிர்வினையை ஏற்படுத்தியதாக சொல்லப்படுகிறது. இதன் விளைவு, சிறுமியின் வலது கால் மற்றும் இடது கை செயல்படாமல் போனதைக் கண்டு அதிர்ந்து போனார் தந்தை கோதண்டபாணி...

மருத்துவர்களே தனது மகளின் இந்த நிலைக்கு காரணம் என கருதினார் கோதண்டபாணி.

மகளின் மீதான அதீத பாசத்தால், அதனை ஜீரணிக்க முடியாத நிலைக்கு அவர் தள்ளப்பட்டார்.

கடந்த ஏப்ரல் மாதம், சம்பந்தப்பட்ட மருத்துவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி, தலைமைச்செயலகம் முன்பு மகளுடன் அமர்ந்து கோதண்டபாணி கண்கலங்கியபடி போராட்டம் நடத்தியது காண்போரை வேதனை அளிக்க வைத்தது. அப்போது சக காவலர்கள், தலைமை காவலரை சமாதானப்படுத்தி அனுப்பி வைத்தனர்.

அன்றைய தினம், இந்த சம்பவத்தில் சம்பந்தப்பட்ட மருத்துவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் மா.சுப்ரமணியன் தெரிவித்திருந்தார்.

அதனைத் தொடர்ந்து தேசிய குழந்தைகள் ஆணையம் சார்பிலும் விசாரணை நடத்தப்பட்டதாக தெரிகிறது.

இந்த நிலையில், போராட்டத்தில் ஈடுபட்டு 4 மாதங்கள் ஆகியும், மகளுக்கு வழங்கப்பட்ட தவறான சிகிச்சை குறித்து, அரசு மருத்துவமனை தரப்பில் சரியான விளக்கம் ஏதும் அளிக்கவில்லை எனவும், முறையாக குழுவை அமைத்து விசாரிக்கவில்லை எனவும் கூறப்படுகிறது.

இதனால் விரக்தி அடைந்த தலைமை காவலர் கோதண்டபாணி, மீண்டும் தனது மகளுடன் சென்னை டிஜிபி அலுவலகம் முன்பு சாலையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டது மேலும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சக காவல் அதிகாரிகள், தலைமை காவலரை சமாதானப்படுத்தியும் தோல்வியில் முடிந்தது.

ஒரு கட்டத்தில் விரக்தி அடைந்த கோதண்டபாணி, தன்னையும், தனது மகளையும் கருணைக் கொலை செய்யுமாறு ஆதங்கத்துடன் கூறியது வேதனை அளித்தது.

கோதண்டபாணி, தலைமைக் காவலர்

"2 ஆண்டுகளாக மகளுக்காக போராடுகிறேன் - தீர்வு கிடைக்கவில்லை"

"என்னையும், மகளையும் கருணைக்கொலை செய்யுங்கள்"

"குழு அமைத்து விசாரிக்கவில்லை"

"மாற்றுத்திறனாளி சான்றிதழ் வழங்குவதாக சொல்கிறார்கள்"

பின்னர் ஒருவழியாக தலைமை காவலர் கோதண்டபாணியை சமாதனப்படுத்திய காவல்துறை அதிகாரிகள், அவரை அங்கிருந்து அனுப்பி வைத்தனர்.

ஆசை ஆசையாய் வளர்த்த மகள், மருத்துவ தவறால் நடக்க முடியாத நிலைக்கு தள்ளப்பட்டதை ஏற்க முடியாத தந்தையின் பாசப்போராட்டத்திற்கு முடிவு வருமா? அல்லது தொடருமா? என்பது காலம்தான் பதில் அளிக்கும்...


Next Story

மேலும் செய்திகள்