சொட்டு கவலை இல்லாமல் ஊட்டி ஊட்டி வளர்த்த பிள்ளைகளால் நடுத்தெருவில் அனாதையாக நிற்கும் தாய்...உடலை புதைக்க கூட இடம் இல்லாநிலை - கண்ணீர் காட்சி
பெற்றெடுத்த 4 மகன்களும், தான் இறந்தால் என் உடலை அடக்கம் செய்ய வைத்திருந்த நிலத்தை முதற்கொண்டு பறித்து விட்டு தெருவில் விட்டதாக மூதாட்டி ஒருவர் அளித்திருக்கும் புகார் கன்னியாகுமரியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது. விரிவாக பார்க்கலாம் இந்த செய்தி தொகுப்பில்..
சத்துணவு வேலைக்கு சென்று 4 மகன், ஒரு மகள் என 5 பிள்ளைகளையும் வளர்த்து ஆளாக்கிய இந்த 80 வயது மூதாட்டியின் தற்போதைய நிலை மனதை ரணமாக்கி இருக்கிறது..
தள்ளாடும் வயதில் வீல் சேரில் அமர்ந்தவாறு தங்க கூட இடம் கொடுக்காமல் தன் 4 மகன்களும் தன்னை தெருவில் விட்டதாக மனமுடைந்து போய் நிற்கிறார் கன்னியாகுமரி மாவட்டம் முளகு மூட்டை சேர்ந்த இந்த ரோசம்மாள்...
4 மகன்களும் திருமணமாகி சென்று அவரவர் குடும்பத்துடன் செட்டிலாகி இருக்கின்றனர்..
இந்நிலையில், மூதாட்டி ரோசம்மாள் தன் கணவருடன் தங்கியிருந்த குடும்ப வீட்டை 4 மகன்களும் எழுதி வாங்கி விட்டு, இருவரையும் துரத்தியடித்திருக்கின்றனர்..
இந்த சம்பவத்திற்கிடையே மூதாட்டியின் கணவர் தாசன் புற்று நோயால் அவதிப்பட்டு வந்ததும் குறிப்பிடத்தக்கது..
இந்நிலையில், தற்போது கணவரையும் பறி கொடுத்து விட்டு நிர்கதியாய் நிற்கிறார் ரோசம்மாள்...
தான் இறந்தால், தன் உடலை அடக்கம் செய்ய வாங்கியிருந்த கல்லறைக்கான இடத்தை கூட மகன்கள் பறித்து விட்டதாகவும், நால்வரையும் வளர்த்தெடுத்த வீட்டின் முற்றத்தில் தன்னை தார்பாய் கட்டி வசிக்கும் அளவுக்கு ஆளாக்கி விட்டதாகவும் மூதாட்டி தெரிவித்திருப்பது பெரும் சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது..
இந்நிலையில், தன் மகளுடன் நாகர்கோவில் ஆட்சியர் அலுவலகத்திற்கு வீல் சேரில் தள்ளாடி வந்த மூதாட்டி, தன் சொத்துக்களை மகன்கள் ஏமாற்றி வாங்கி விட்டதாக கூறி மனு கொடுத்திருக்கிறார்..