"குடுக்குறியா இல்ல வீட்டில சொல்லவா" - பணம் கேட்டு மிரட்டிய போலி போலீஸ் - விசாரணையில் வெளிவந்த பகீர் தகவல்
சென்னையில், போலீஸ் எனக்கூறி இளைஞரிடம் 92 ஆயிரம் ரூபாய் மற்றும் 4 கிராம் தங்கத்தை பறித்த முன்னாள் ஊர்காவல்படை வீரர் கைது செய்யப்பட்டுள்ளார்.
சென்னை முகப்பேரை சேர்ந்த மணிகண்டன் என்பவர், கடந்த 27ஆம் தேதி ஒரு பெண்ணுடன் வீடு திரும்பிய போது, போலீஸ் எனக்கூறி ஐடி கார்டை காட்டி ஒருவர் மறித்துள்ளார். பெண்ணுடன் சென்று வந்ததை பெற்றோரிடம் கூறிவிடுவேன் எனக்கூறி மணிகண்டனிடம் 15 ஆயிரம் ரூபாய் ஜீபே மூலம் பெற்றுக்கொண்ட அந்த நபர், அடுத்தடுத்த நாட்களில் தொடர்பு கொண்டு பணம் கேட்டு மிரட்டி 95 ஆயிரம் ரூபாய் மற்றும் 4 கிராம் தங்கத்தை பறித்துள்ளார். இதுகுறித்து சூளைமேடு போலீசில் மணிகண்டன் புகார் அளித்ததும் விசாரணையை தொடங்கினர். அப்போது, அந்த நபர் பயன்படுத்தியது பெண் காவலரின் வாகனம் என்றும், பணம் பறிப்பில் ஈடுபட்டது காவலரின் காதலன் பாலாஜி என்றும் கண்டுபிடிக்கப்பட்டது. அவரை கைது செய்து விசாரித்த போது, எம்பிஏ பட்டதாரி என்பதும், முன்னாள் ஊர்க்காவல் படை வீரர் என்பதும் தெரிய வந்துள்ளது. மேலும், ஏமாற்றி பறித்த பணத்தை ஆன்லைன் ரம்மியில் இழந்ததும், நகையை அடகு வைத்ததும் தெரிய வந்துள்ளது.