ரிசர்வ் வங்கி பெயரில் மோசடி..அமெரிக்க பேங்க்கின் SMS "திருச்சபைக்குள் இரிடியம் டெஸ்ட்"
இரிடியம் மூலம் வெளிநாட்டில் இருந்து பணம் வருவதாக கூறி, ரிசர்வ் வங்கி உள்ளிட்ட வங்கிகளின் பெயரில் போலி ஆவணங்களைக் கொண்டு 68 லட்சம் ரூபாய் வரை ஏமாற்றி மோசடி செய்த கும்பல் குறித்து தெரியவந்திருக்கிறது.. இதுகுறித்து பார்க்கலாம்..
தூத்துக்குடி மாவட்டம், ஓட்டப்பிடாரம் அருகே உள்ள கக்காரம்பட்டி கிராமத்தில் தான் இந்த மோசடி அரங்கேறியுள்ளது. இங்கு ஆறுமுக கிருஷ்ணன் - வசந்தா தம்பதி வசித்து வருகின்றனர். பில்டிங் கான்ட்ராக்டரான ஆறுமுக கிருஷ்ணனுக்கு, ஓட்டப்பிடாரத்தில் உள்ள தேவாலயத்தின் மதபோதகர் நியூட்டன் டேவிட் என்பவர் நண்பராக அறிமுகமாகியுள்ளார்.
தங்களது ட்ரஸ்டின் பெயரில், முதியோர் மற்றும் குழந்தைகள் காப்பகம் அமைக்க உள்ளதாக மதபோதகர் கூறியுள்ளார். இதற்காக, அமெரிக்கா உள்ளிட்ட வெளிநாடுகளில் இருந்து வரவேண்டிய சுமார் 30 கோடி ரூபாய் பணம் இன்னும் வரவில்லை எனக் கூறியதோடு, ரிசர்வ் பேங்க் உள்பட பல வங்களின் போலி ஆவணங்களைக் காண்பித்துள்ளனர்.
மேலும், இப்பணிகளுக்காக உதவுமாறு கடந்த 4 ஆண்டுகளாக சுமார் 68 லட்சம் ரூபாய் வரை ஆறுமுக கிருஷ்ணராஜிடம், நியூட்டன் டேவிட் பெற்றதாக கூறப்படுகிறது. அதேபோல, அமெரிக்காவில் உள்ள ஏதோ ஒரு வங்கியில் இருந்து போலி மெசேஜ்களையும் வரவழைத்திருக்கிறார், இந்த மதபோதகர்...
ஆனால், இப்படியாக அவரது நடவடிக்கையில் சந்தேகம் ஏற்படவே, ஆறுமுக கிருஷ்ணன் மதபோதகர் நியூட்டன் டேவிட்டை நோட்டமிட்டு வந்திருக்கிறார்..
அதில், திருச்சபைக்கு உள்ளேயே யாருக்கும் தெரியாமல் ஒரு லேபை உருவாக்கி, இரிடியம் உள்ளிட்ட பொருட்களை ஆய்வு செய்வது போல கவச உடையில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். இதன் பின்னணியில், மதபோதகர் நியூட்டன் உள்ளிட்ட சிலர் சேர்ந்து, பழங்கால சிலை உள்ளிட்ட பொருட்களை வெளிநாட்டினருக்கு விற்பனை செய்து வந்தது வெளிச்சத்திற்கு வந்திருக்கிறது.
இப்படி மதபோதகர் எனும் போர்வையில், பழங்கால பொருட்களை பல கோடி ரூபாய்களுக்கு, வெளிநாட்டிற்கு சட்டவிரோதமாக அவர் ஏற்றுமதி செய்வதாக கூறப்படுகிறது. இந்த மோசடிகளுக்கு எல்லாம், அவரது மனைவி அஜிதா உள்பட பாண்டியராஜ், கேரளாவைச் சேர்ந்த சிபி குமார் - வனஜா தம்பதி, போலி ரிசர்வ் பேங்க் அதிகாரிகளான செல்வம் மற்றும் பாண்டியராஜ் எனப் பலருக்கும் இதில் தொடர்புள்ளதாகக் கூறப்படுகிறது.
இந்த சூழலில் தான், தங்களது 68 லட்சம் ரூபாய் பணத்தைக் கேட்டதற்காக, காரை ஏற்றி கொலை செய்துவிடுவதாக இந்த கும்பலினர் மிரட்டுவதாக ஆறுமுக கிருஷ்ணன் - வசந்தா தம்பதி மாவட்ட ஆட்சியரிடம் தங்களுக்கு பாதுகாப்பு வழங்கவேண்டும் எனவும், இழந்த தங்களது பணத்தை மீட்டுத் தரவேண்டும் எனவும் கோரி மனு அளித்துள்ளனர்.
மேலும் இதுதொடர்பாக, மதபோதகர் உள்ளிட்டோரை கைது செய்யக் கோரி, மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடமும் புகார் மனு அளிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. மதபோதகர் என்ற முகமூடியில் இருந்து கொண்டு போலியாக ரிசர்வ் வங்கி ஆவணம் தயாரித்து 68 லட்சம் ரூபாய் பணத்தை மோசடி செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது..