2030-ல் தமிழகத்தை ஒரு டிரில்லியன் டாலர் பொருளாதார மாநிலமாக்க இலக்கு - முதல்வரின் அதிரடி பயணம்

x

முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் 17 நாட்கள் அரசு முறை பயணமாக அமெரிக்கா செல்கிறார்.

2030 ஆம் ஆண்டில் தமிழகத்தை ஒரு டிரில்லியன் டாலர் பொருளாதார மாநிலமாக்க தமிழக அரசு இலக்கு நிர்ணயம் செய்துள்ளது. இலக்கை நோக்கி வெளிநாடு முதலீடுகளை ஈர்க்கும் வகையில் துபாய், அபுதாபி, சிங்கப்பூர், ஜப்பான், ஸ்பெயின் நாடுகள் பயணம் செய்த முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், இப்போது அமெரிக்கா செல்கிறார். இதற்கான முன்னேற்பாடுகளை செய்ய தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா அமெரிக்காவில் முகாமிட்டுள்ளார். சென்னையில் இருந்து நாளை அமெரிக்கா புறப்பட்டு செல்லும் மு.க. ஸ்டாலின், 17 நாட்கள் அமெரிக்காவில் பயணம் செய்கிறார். அமெரிக்காவில் அவருக்கு அமெரிக்க வாழ் தமிழர்கள் பிரமாண்ட வரவேற்பை அளிக்கிறார்கள்.

ஆகஸ்ட் 28 ஆம் தேதி தொடங்கி செப்டம்பர் 2 ஆம் தேதி வரையில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் சான்பிரான்சிஸ்கோவில் உலகின் முன்னணி நிறுவனங்களின் பிரதிநிதிகளை சந்திக்கிறார். குகூள் நிறுவனத்தின் சி.இ.ஓ.வான தமிழகத்தை சேர்ந்த சுந்தர் பிச்சை உள்பட பல்வேறு நிறுவனங்களின் அதிகாரிகளை சந்திக்கிறார்.

அப்போது தமிழகத்தில் தொழில் தொடங்க அழைப்பு விடுக்கிறார். ஆகஸ்ட் 29 ஆம் தேதி சான்பிரான்சிஸ்கோவில் இன்வெஸ்டர் கான்கிளேவ் (investors conclave) முதலீட்டாளர்கள் கூட்டத்தில் முதல்வர் பங்கேற்று உரை நிகழ்த்துகிறார்.

ஆகஸ்ட் 31 ஆம் தேதி புலம் பெயர் தமிழர்களை சந்தித்து பேசுகிறார். செப்டம்பர் 7 ஆம் தேதி சிகாகோவில் அமெரிக்காவின் தமிழ் சங்கங்கள் இணைந்து நடத்தும் 'வணக்கம் அமெரிக்கா" கலை நிகழ்ச்சியிலும் கலந்துக்கொள்கிறார். முதல்வர் பயணத்தில் தமிழக தொழில் வளர்ச்சிக்காக பல புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாக கூடும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.


Next Story

மேலும் செய்திகள்