சென்னை மக்களை பதறவைத்த சம்பவத்திற்கு ஒரு நிரத்தர தீர்வு? ஒரு முடிவோடு இறங்கிய மாநகராட்சி

x

சென்னையில் நாய்களால் ஏற்படும் அச்சுறுத்தலுக்கு விரைவில் தீர்வு கொண்டு வரும் முயற்சியில் இறங்கியிருக்கிறது மாநகராட்சி. இதன் பின்னணி குறித்து விவரிக்கிறது இந்த தொகுப்பு....

ஒருபக்கம் ஆக்ரோஷம் கொண்ட ராட்வீலர் போன்ற நாய்கள் விரட்டி விரட்டி கடிக்கும் காட்சிகள்.. மற்றொரு பக்கம் சாலைகளில் சுற்றி வரும் தெருநாய்களின் அட்டகாசங்கள் என சென்னை மக்களுக்கு சாலையில் நடப்பது என்றாலே அச்சம் எனும் அளவுக்கு ஆகிப்போனது நிலைமை...

இது ஒரு பக்கம் என்றால் சாதுவாக சுற்றி வரும் மாடுகள் எல்லாம் மறுபக்கம் முறுக்கிக் கொண்டு மக்களை விரட்டி விரட்டி முட்டிய காட்சிகளையும் பார்த்து பதறிப்போனோம்...

இதுக்கு முடிவே இல்லியா? எப்படித்தான் ரோட்டுல நாங்க நடக்குறது? என மக்களின் புலம்பல்களும் கோபங்களும் இணையத்தில் கொட்டித்தீர்க்கப்பட்ட நிலையில் அவ்வப்போது எடுக்கப்பட்டு வந்த நடவடிக்கைகள் குறித்து விளக்கம் அளித்தது மாநகராட்சி...

ஆனால் நிரந்தர தீர்வு தான் மக்களின் அச்சத்திற்கு தேவை என்பதை உணர்ந்த மாநகராட்சி இப்போது புதிய நடவடிக்கைகளை உடனே மேற்கொள்ள திட்டமிட்டு வருகிறது..

சென்னை மாநகராட்சி எல்லைக்குட்பட்ட பகுதிகளில் தெருக்களில் சுற்றித் திரியும் நாய்களின் இனப்பெருக்கத்தை கட்டுப்படுத்தும் பணிகளை மேற்கொண்டு வருவதோடு, வெறிநாய்க்கடி நோய் தடுப்பூசி செலுத்தும் திட்டமும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது...

நாய்களுக்கு கருத்தடை செய்வதற்கு சென்னை மாநகராட்சியின் கட்டுப்பாட்டில் பேசின்பாலம், லாயிட்ஸ் காலனி, கண்ணம்மாபேட்டை,மீனம்பாக்கம் மற்றும் சோழிங்கநல்லூர் ஆகிய 5 இடங்களில் நாய் இன கட்டுப்பாடு மையங்கள் செயல்பட்டு வருகின்றன.

இந்நிலையில் தெருநாய்களுக்கான கருத்தடை அறுவை சிகிச்சையின் எண்ணிக்கை, தரத்தை உயர்த்த தனியார் கால்நடை மருத்துவர்களுக்கு தற்போது வழங்கப்படும் கருத்தடை அறுவை சிகிச்சை கட்டணத்தை உயர்த்த சென்னை மாநகராட்சி திட்டமிட்டுள்ளது.

பெண் நாய்க்கு கருத்தடை அறுவை சிகிச்சை செய்ய 300 ரூபாயில் இருந்து 450 ரூபாயாகவும், ஆண் நாய்களுக்கு அறுவை சிகிச்சை செய்ய 200ல் இருந்து 350 ரூபாயாகவும் தனியார் கால்நடை மருத்துவர்களுக்கான கட்டணத் தொகை உயர்த்த திட்டமிடப்பட்டுள்ளது...

வரும் நாள்களில் சென்னையில் சுற்றித் திரியும் நாய்களுக்கு ஊசிகள் மூலம் கருத்தடை செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது...

நாய்கள் விவகாரத்தில் நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சரிடம் தாங்கள் முன்வைத்த கோரிக்கையின்படி விரைவில் சட்டத்திருத்தம் கொண்டு வரப்படும் என சென்னை மேயர் பிரியா நம்பிக்கை தெரிவித்துள்ளார்...

சென்னையில் சுற்றித் திரியும் மாடுகள் முதன்முறை பிடிபட்டால் 5 ஆயிரம் ரூபாய் அபராதம்...2வது முறையில் பிடிபட்டால் அபராதம் இரட்டிப்பாகி 10 ஆயிரம் ரூபாய்...ஒருவேளை 3வது முறை தப்பித்தவறி பிடிபட்டு விட்டால் மாடு ஏலத்திற்கே போய் விடும் என்று அமைச்சர் நேரு சட்டப்பேரவையிலேயே அறிவித்து விட்டார்...

கேட்பாரற்று சுற்றித் திரியும் மாடுகள் தொடர்பாக சட்டங்கள் கொண்டுவர சென்னை மாநகராட்சி முடிவு செய்துள்ள நிலையில் அடுத்து, நாய்கள் விவகாரத்திலும் நடவடிக்கையைத் தீவிரப்படுத்த சட்டத்திருத்தம் கொண்டு வர திட்டமிட்டுள்ளதால் சென்னைவாசிகள் நிம்மதி அடைந்துள்ளனர்...

இதற்குப் பிறகாவது மாடுகள், நாய்களால் தாக்கப்படும் பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வு எட்டப்பட்டு சாலையில் நிம்மதியாக நடமாடலாம் என்பதே சென்னை மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது...


Next Story

மேலும் செய்திகள்