பைக் டாக்ஸி ஓட்டினால் ரூ. 10,000 அபராதம்! - மொத்தமாக முற்றுப்புள்ளி வைத்து அதிரடி
சென்னை, கோவை உட்பட மாநகரங்களில் ஊபர், ஓலா, ரேபிடோ நிறுவனங்கள் மூலம் ஆட்டோ, கார் டாக்ஸி போக்குவரத்து நடைமுறையில் உள்ளன.
பேருந்து நிலையம், ரயில் நிலையம், விமான நிலையம் போன்ற இடங்களில் இந்த வசதியை பொதுமக்கள் அதிகளவில் பயன்படுத்தி வருகின்றனர்.
இவை அனைத்தும் மோட்டார் வாகன விதிகளுக்கு உட்பட்டு பயணிகளை ஏற்றிச்செல்லும் வாகன பதிவு அடிப்படையில் இயக்கப்பட்டு வருகிறது .
ஆனால், இதே தனியார் செயலிகளில் பைக் டாக்ஸி என்ற பெயரில் இருசக்கர வாகனங்களில் பயணிகளை அழைத்துச் செல்லும் வசதி நடைமுறையில் உள்ளது. இவை அரசின் போக்குவரத்து விதிகளை மீறி செயல்படக்கூடியவையாக இருந்து வருகிறது.
அண்மை காலமாக இத்தகைய பைக் டாக்ஸிகளின் பயன்பாடு அதிகரித்துள்ளது. குறிப்பாக ஒரே ஒரு நபர் பயணம் மேற்கொள்ள வேண்டுமென்றால், இத்தகைய பைக் டாக்ஸி சேவை பயன்படுத்துவதன் மூலம் குறைந்த செலவில் பயணம் மேற்கொள்ள முடியும்.
அதேசமயம், விபத்து உள்ளிட்டவை நிகழும் போது இத்தகைய சேவையை பெறுபவர்கள் இன்சூரன்ஸ் பெற முடியாத சூழலும் நீடிக்கிறது...
காரணம் தமிழகத்தைப் பொருத்தமட்டில் மோட்டார் வாகன சட்டப்படி , வெள்ளை நிற வாகன பதிவெண் கொண்ட வாகனங்களில் அதாவது சொந்த வாகனங்களில் பயணிகளை ஏற்றிச் செல்வது சட்டப்படி குற்றமாக பார்க்கப்படுகிறது ...
கடந்த சில ஆண்டுகளாக பைக் டாக்சி மீதான விபத்துகளும் அதிகரித்துள்ள நிலையில் , விபத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு எந்த ஒரு பயனும் கிடைக்கவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது...
இந்த நிலையில், வேலை வாய்ப்பில்லாத இளைஞர்கள் பலர் இத்தகைய பைக் டாக்ஸி சேவையை இயக்கி வருவதால், தொடர்ந்து விதிமீறல்களில் ஈடுபடுவதாகவும் குற்றச்சாட்டு நிலவி வருகிறது..
இத்தகைய போக்குவரத்து முறைக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆட்டோ மற்றும் கார் டாக்ஸி ஓட்டுநர்கள் சைதாப்பேட்டையில் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர் .
இதன் எதிரொலியாக தமிழ்நாடு போக்குவரத்து துறை தற்போது அதிரடி உத்தரவை வழங்கியுள்ளது. அதன்படி தனியார் வாகனங்களில் வணிக அடிப்படையில் பயணிகளை ஏற்றிச்செல்வது சட்டப்படி குற்றம் எனவும், அனைத்து வட்டாரப் போக்குவரத்து அலுவலர்களும் கள ஆய்வு மேற்கொண்டு , வணிக அடிப்படையில் இயக்கப்படும் வெள்ளை நிற பதிவெண் கொண்ட வாகனங்களை தணிக்கை செய்து உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது .
இந்நிலையில் இது தொடர்பாக, போக்குவரத்துறை அமைச்சர் சிவசங்கர் விளக்கமளித்துள்ளார். இது தொடர்பாக போக்குவரத்துறை ஆணையர் வெளியிட்டுள்ள உத்தரவில் தினசரி மண்டல வாரியாக கள ஆய்வு மேற்கொண்டு அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு வழங்கப்பட்டுள்ளது . அந்த வகையில் மண்டல வாரியாக ஆர்டிஓ அதிகாரிகள் கள ஆய்வு மேற்கொண்டு விதிகளை மீறி இயக்கப்படும் வாகனங்களுக்கு பத்தாயிரம் ரூபாய் அபராதம் விதிக்க உள்ளனர். தொடர்ந்து வாகனங்கள் இயக்கப்படும் பட்சத்தில் வாகனங்களை பறிமுதல் செய்யவும் திட்டமிட்டுள்ளனர் ..
பைக் டாக்ஸி சேவைக்கு முற்றுப்புள்ளி தனியார் செயலிகள் மூலம் பைக் டாக்ஸி என்ற பெயரில் இருசக்கர வாகனங்களில் பயணிகளை அழைத்துச் செல்லும் வசதி. அரசின் போக்குவரத்து விதிகளை மீறி செயல்படும் பைக் டாக்ஸி
ஒரே ஒரு நபர் பயணம் மேற்கொள்ள வேண்டுமென்றால், குறைந்த செலவில் பயணம் மேற்கொள்ள முடியும்
விபத்து நேர்ந்தால் பைக் டாக்ஸி சேவையை பெறுபவர்கள் இன்சூரன்ஸ் பெற முடியாது. மோட்டார் வாகன சட்டப்படி, வெள்ளை நிற வாகன பதிவெண் கொண்ட வாகனங்களில் பயணிகளை ஏற்றிச் செல்வது சட்டப்படி குற்றம். பைக் டாக்ஸி விபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு எந்த ஒரு பயனும் கிடைக்கவில்லை. வேலை வாய்ப்பில்லாத இளைஞர்கள் பலருக்கு சாதகமாக இயங்கும் பைக் டாக்ஸி. தொடர்ந்து விதிமீறல்களில் ஈடுபடுவதாகவும் குற்றச்சாட்டு.