அட்டைப் பெட்டியில் சிசுவின் சடலம்..! "ரூ.2500 கேட்ட குரூர மனிதர்கள்.." -ஒரு தந்தையின் குமுறல்
சென்னை புளியந்தோப்பு பகுதியை சேர்ந்த சவுமியா என்ற பெண்ணுக்கு, கடந்த 5ஆம் தேதி மழை வெள்ளத்தின் போது மருத்துவமனை செல்ல முடியாத நிலையில், வீட்டிலேயே குறைப் பிரசவத்தில் பெண் குழந்தை பிறந்தது. சிசு பிறந்த சிறிது நேரத்தில் இறந்த நிலையில், தாய் மற்றும் இறந்த குழந்தையை மீட்டு, கணவர் மசூத், வெள்ளத்தின் இடையே போராடி கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றார். மருத்துவமனை ஊழியர்களிடம் சிசுவின் உடலை மசூத் ஒப்படைத்தபோது, அவரிடம் இருந்து 2 ஆயிரத்து 500 ரூபாய் பணத்தை லஞ்சமாக பெற்றதாக கூறப்படுகிறது. இதனிடையே, குழந்தையின் அட்டைப் பெட்டியில் வைத்து, முறையாக துணிகளை கூட சுற்றாமல் மருத்துவமனை ஊழியர்கள் மனிதாபிமானமற்ற முறையில் தந்தையிடம் கொடுத்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுதொடர்பாக புகார் எழுந்த நிலையில், உதவியாளராக பணிபுரியும் பன்னீர்செல்வம் என்பவரை பணியிடை நீக்கம் செய்து மருத்துவமனை நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது. இந்த விவகாரம் தொடர்பாக, அரசு மருத்துவமனை முதல்வர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி, தேசிய மனித உரிமைகள் ஆணையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து திரைப்பட பின்னணி பாடகி சின்மயி உட்பட பலரும், சமூக வலைதளங்களில் வருத்தம் தெரிவித்து வருகின்றனர்.