தவெக மாநாடு.. "இன்னும் ஓரிரு நாளில்.." - புஸ்ஸி ஆனந்த் சொன்ன தகவல்
விக்கிரவாண்டியில் விஜய் கட்சி மாநாட்டுக்கு அனுமதி வழங்கப்படுமா? என்பது ஓரிரு நாளில் தெரியவரும் என தெரியவந்துள்ளது.
விக்கிரவாண்டியில் விஜயின் தமிழக வெற்றிக்கழகத்தின் அரசியல் மாநாட்டை நடத்த அனுமதி கோரியும், பாதுகாப்பு கேட்டும் மாவட்ட ஆட்சியர், காவல்துறையிடம் மனு கொடுக்கப்பட்டது. அங்கு ஆய்வு செய்த போலீசார், கட்சி நிர்வாகிகளோடு ஆலோசித்த போது, நெடுஞ்சாலை அருகே நெரிசல் ஏற்படலாம் என்றபோது, வாகனங்கள் நிறுத்துமிடம் தயார் செய்திருப்பதாக கட்சி நிர்வாகிகள் எடுத்துரைத்தனர். இதனையடுத்து மாநாடு குறித்து 21 கேள்விகள் அடங்கிய பட்டியலை விழுப்புரம் உட்கோட்ட துணை போலீஸ் சூப்பிரண்டு சுரேஷ், கட்சி பொதுச்செயலாளர் புஸ்சி ஆனந்துக்கு கடிதம் எழுதியிருந்தார். இந்த கேள்விகள் குறித்து விஜய், சட்ட வல்லுநர்களோடு ஆலோசித்த பிறகு விரிவான பதில் தயாரிக்கப்பட்டது. இதனையடுத்து விழுப்புரம் சென்ற புஸ்சி ஆனந்த், பதிலை துணை போலீஸ் சூப்பிரண்டு சுரேசை சந்தித்து வழங்கினார். அதை பெற்றுக் கொண்ட சுரேஷ், உயர் அதிகாரிகளுடன் கலந்தாலோசித்து பதில் சொல்வதாக தெரிவித்திருப்பதாகவும், மாநாட்டில் கலந்து கொள்பவர்களின் விபரங்களை விஜய் அறிவிப்பார் என்றும் புஸ்சி ஆனந்த் தெரிவித்தார்