பரபரப்பான தேர்தல் களம்.. விதவிதமாக வந்த வேட்பாளர்கள்
நாடாளுமன்ற மற்றும் காலியாக உள்ள சட்டமன்றத் தொகுதிகளுக்கான தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டு இன்று வேட்புமனு தாக்கல் துவங்கியுள்ளது...
மதுரை நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட தூக்குக் கயிறுடன் வேட்பு மனு தாக்கல் செய்ய வந்த சுயேச்சை வேட்பாளரால் பரபரப்பு ஏற்பட்டது... செல்லூரைச் சேர்ந்த சங்கர பாண்டியன் பணத்தைப் பெற்றுக் கொண்டு ஊழல் வாதிகளுக்கு வாக்களித்தால் அது தற்கொலை செய்வதற்கு சமம் என்று வலியுறுத்தும் விதமாக தூக்குக் கயிற்றில் போலி பணத்தை கட்டி தொங்க விட்டவாறு வந்தார்... ஆனால் காவல்துறையினர் அதைப் பறிமுதல் செய்தனர்...
குமரி மாவட்டம் விளவங்கோடு சட்டமன்ற தொகுதியில் இடைத்தேர்தல் நடைபெற உள்ளதையொட்டி அதற்கான வேட்புமனு தாக்கல் இன்று துவங்கியது... முதற்கட்டமாக மார்த்தாண்டம் பகுதியை சேர்ந்த சமூக ஆர்வலரான மோகன் குமார் என்பவர் விளவங்கோடு தாலுகா அலுவலகத்தில் வேட்புமனுவை தாக்கல் செய்தார்.
நாமக்கல் மாவட்டம் மேற்கு பாலப்பட்டியை சேர்ந்த சமூக ஆர்வலரும் காந்தியவாதியுமான ரமேஷ் காந்தி என்பவர் முதல் ஆளாக தனது வேட்புமனுவை ஆட்சியர் உமாவிடம் தாக்கல் செய்தார். 10 ரூபாய் நாணயங்களை வாங்க சிலர் மறுக்கும் நிலையில், விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக டெபாசிட் தொகையான 25 ஆயிரம் ரூபாயை 10 ரூபாய் நாணயங்களாக எடுத்து வந்து செலுத்தினார்...
தூத்துக்குடி நாடாளுமன்ற தொகுதியில் சுயேட்சையாக போட்டியிட தூத்துக்குடி மாவட்டம் உமரிகாடு பகுதியை சார்ந்த சென்னையில் உணவு டெலிவிரி பணி செய்யும் சிவனேஸ்வரன் என்ற இளைஞர் வேட்புமனு தாக்கல் செய்தார்... படித்த இளைஞர்கள் அரசியலுக்கு வர வேண்டும் என்ற நோக்கத்தில் எம்டெக்,எம்பிஏ முடித்த தான் தேர்தலில் போட்டியிடுவதாக அவர் தெரிவித்தார்.