போலீஸ் கண்முன்னே தவெக நிர்வாகியை புரட்டி எடுத்த திமுகவினர் - பரபரப்பு காட்சிகள்
உளுந்தூர்பேட்டையில் போலீசாரின் கண்ணெதிரிலேயே தமிழக வெற்றிக்கழக நிர்வாகியை திமுக கவுன்சிலரும் அவருடைய ஆதரவாளர்களும் தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.உளுந்தூர்பேட்டையைச் சேர்ந்த சஞ்சய் என்பவரின் ஆதரவாளர்களுக்கும், தவெக நிர்வாகியான ஸ்ரீதர் என்பவரின் ஆதரவாளர்களுக்கும் கோவில் திருவிழா சம்பந்தமாக முன் விரோதம் இருந்து வந்தது. இந்த நிலையில் இரு தரப்பை சேர்ந்தவர்களும் இரண்டு குழுக்களாக பிரிந்து, ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டனர்.
இதில் காயமடைந்த ஸ்ரீதர் மற்றும் அவருடைய நண்பர்கள் 3 பேர், உளுந்தூர்பேட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.
இந்நிலையில், ஸ்ரீதரை பார்ப்பதற்காக பாரதிராஜா என்ற தவெக நிர்வாகி, மருத்துவமனைக்கு வந்துள்ளார். அதே நேரம் சஞ்சய் மற்றும் கார்த்தியை பார்ப்பதற்காக திமுக கவுன்சிலர் முருகவேல் மற்றும் அவரது ஆதரவாளர்களும் அங்கு வந்துள்ளனர். அப்போது முருகவேல் தரப்பினரை பாரதிராஜா ஆபாசமாக திட்டியதாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த முருகவேல் மற்றும் அவரது ஆதரவாளர்கள், பாரதிராஜாவை போலீசாரின் கண்ணெதிரிலேயே போட்டு அடித்து புரட்டி எடுத்தனர். பாரதிராஜாவுக்கு ஆதரவாக நூற்றுக்கும் மேற்பட்ட தமிழக வெற்றி கழகத்தினர் உளுந்தூர்பேட்டை அரசு மருத்துவமனைக்கு வந்தனர். அவர்களை மருத்துவமனை வளாகத்திலிருந்து போலீசார் வெளியேற்றினர். இரு தரப்பும் அளித்த புகாரின் பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.