10 நிமிடத்தில் 26 செய்திகள் | மாலை தந்தி எக்ஸ்பிரஸ் | Speed News | Thanthi News (05.09.2023)
இந்தியாவின் பெயரை 'பாரத்' என பெயர் மாற்றம் செய்யும் மசோதா, வரும் நாடாளுமன்ற சிறப்பு கூட்டத் தொடரில் தாக்கல் செய்யப்படலாம் என தகவல் வெளியாகி உள்ளது. வரும் 18-ம் தேதி முதல் 22-ம் தேதி வரை நடைபெறும் நிலையில், இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் முகவுரையில், இந்தியா என்ற பெயரை பாரத் என பெயர் மாற்றம் செய்யும் அரசியல் சாசன சட்ட திருத்த மசோதா தாக்கல் செய்யப்படலாம் என்றும் கூறப்படுகிறது.
சனாதனம் குறித்த அமைச்சர் உதயநிதி ஸ்டாலினின் பேச்சு தொடர்பாக உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதிக்கு முன்னாள் உயர் நீதிமன்ற நீதிபதிகள், ஓய்வு பெற்ற அரசு உயர் அதிகாரிகள் உள்ளிட்ட 262 பேர் கடிதம் எழுதியுள்ளனர்.
இது அமைச்சரின் மத வெறுப்பு பேச்சு என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை என்றும் கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. அமைச்சருக்கு எதிராக வழக்கு பதிவு செய்ய தமிழ்நாடு அரசு மறுத்திருப்பதுடன் அவரது பேச்சை நியாயப்படுத்தி வருவதாகவும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது
வடகிழக்கு பருவமழை தொடங்குவதற்குள், மழைநீர் வடிகால் அடைப்புகளை நீக்க வேண்டும் என அமைச்சர் எ.வ.வேலு அறிவுறுத்தியுள்ளார். தலைமைச்செயலகத்தில் நடைபெற்ற ஆய்வு கூட்டத்தில் பேசிய அவர், வரும் 30ஆம் தேதிக்குள் மழைநீர் வடிகால் அடைப்பு நீக்கும் பணியை நிறைவு செய்ய வேண்டும் என அறிவுறுத்தினார். மேலும் நிரந்தர வெள்ளத்தடுப்புப் பணிகள், திருவான்மியூர் - அக்கரை ஆறுவழி சாலையாக அகலப்படுத்தும் பணி உள்ளிட்டவை குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிந்தார்.
ஆந்திர மாநிலம் சத்யாசாய் அருகே திருமணம் கடந்த உறவில் குடும்பம் நடத்திய ஜோடிக்கு, அரைகுறை மொட்டை அடித்த உறவினர்கள், ஊர்வலமாக அழைத்து சென்ற நிகழ்வு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இருவரும், திருமணம் செய்து கொள்ளாமல் ஒரே வீட்டில் வசித்து வந்த நிலையில், இதை அவமானமாக கருதிய உறவினர்கள், இருவருக்கும் அரைகுறை மொட்டை அடித்து, கைகளை கட்டி ஊர்வலமாக அழைத்து சென்றனர். இது குறித்து அளிக்கப்பட்ட புகாரில், தலைமறைவாக உள்ள உறவினர்களை போலீசார் தேடி வருகின்றனர்.