கணவனுக்கு பாடம் புகட்ட 1 மாத குழந்தையை உயிரோடு புதைத்த மனைவி.. காட்டிக்கொடுத்த மயானத்தில் தெரிந்த 'கால்'

x

புதுச்சேரியில், கணவன் மனைவிக்குள் ஏற்பட்ட தகராறில், பிறந்து ஒரு மாதமே ஆன பச்சிளம் பெண் குழந்தையை, பெற்ற தாயே உயிரோடு சுடுகாட்டில் புதைத்துக் கொன்ற கொடூர சம்பவத்தின் பின்னணியை விவரிக்கிறது இந்த தொகுப்பு...

புதுச்சேரி எல்லை பகுதியான மனபட்டு மயானத்தில், குழந்தை ஒன்று அரைகுறையாக புதைக்கப்பட்டு, அதன் கால் பகுதி மட்டும் தெரிவதாக கிருமாம்பாக்கம் போலீசாருக்கு தகவல் வந்தது. அதன்படி, சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார், அரைகுறையாக புதைக்கப்பட்டிருந்த குழந்தையின் உடலை மீட்டனர்.

அப்போது குழந்தையின் தாய், சடலமாக இருந்த குழந்தையை பார்த்து கதறி அழுதார். பச்சிளம் குழந்தையின் உடலை மீட்ட போலீசார், பிரேத பரிசோதனைகாக கதிர்காமம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இது தொடர்பாக குழந்தையின் பெற்றோரான குமரேசன் - சங்கீதா தம்பதியை காவல்நிலையம் அழைத்துச் சென்று போலீசார் விசாரணை நடத்தினர். அதில் அவர்கள் அளித்த பகீர் தகவல், அதிர்ச்சி அடைய வைத்தது.

உடல்நலம் பாதிக்கப்பட்டு பச்சிளம் குழந்தை இறந்ததாகவும், அதனை மனப்பட்டு மயானத்தில் புதைத்து சென்றதாகவும் போலீசாரின் ஆரம்ப கட்ட விசாரணையில் தெரியவந்தது.

ஆனால், அதில் உடன்படாத போலீசார் சந்தேகத்தின் பேரில் தங்களது பாணியில் விசாரணை நடத்தியபோது, உண்மை வெளிச்சத்திற்கு வந்தது. அதாவது, குழந்தை பிறந்ததில் இருந்தே குமரேசன் - சங்கீதா இருவருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இருவரும் மதுபோதையில் இருந்தபோது மீண்டும் தகராறு ஏற்படவே, இந்த குழந்தை தனக்கு பிறக்கவில்லை என குமரேசன் சங்கீதாவிடம் கூறியுள்ளார். அப்போது ஆத்திரமடைந்த சங்கீதா, பச்சிளம் குழந்தையை மயானத்திற்கு கொண்டு சென்று உயிரோடு புதைத்தாக கூறியது, போலீசாரையே திணறடித்தது.

பின்னர் இதனை கொலை வழக்காக பதிவு செய்த போலீசார், சங்கீதாவை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

கணவன் மனைவிக்குள் ஏற்பட்ட தகராறில், பெற்ற தாயே தனது பச்சிளம் குழந்தையை உயிரோடு மண்ணில் புதைத்து கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்